லண்டன், ஏப். 10 - இங்கிலாந்து நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவி வகித்த மார்க்ரெட் தாட்சர் (வயது 87) நேற்று காலமானார். 20 ம் நூற்றாண்டு இங்கிலாந்து நாட்டு அரசியலில் மிக முக்கியமானவராக ஆளுமை மிக்க நபராக திகழ்ந்தவர்களில் மார்க்ரெட் தாட்சரும் ஒருவர். 1925 ம் ஆண்டு சாதாரண மளிகைக் கடைக்காரரின் மகளாக பிறந்தவர் தாட்சர். 1951 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 1953 ம் ஆண்டு பாரிஸ்டராக பட்டம் பெற்றார். 1959 ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டு எம்.பியா.னார். அவர் 1979 ம் ஆண்டு இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார். அவர் மேற்கொண்ட துணிச்சலான ராணுவ, பொருளாதார நடவடிக்கைகளுக்காக இரும்பு மனுஷி என அழைக்கப்பட்டார்.
டிப்காலாந்து தீவுகள் விவகாரத்தில் அர்ஜெண்டினாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட இவரது ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து தொழில்துறையில் முன்னணி நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றது. 1990 ம் ஆண்டுக்கு பிறகு அரசியல் இருந்து அவர் ஒதுங்கியிருந்தார். அவ்வப்போது நெஞ்சு வலியால் தாட்சர் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நாளுக்கு முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.