தெற்கு சூடானில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலி

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 11 - தெற்கு சூடான் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஐ.நா. அமைதிப் படையின் ஒரு பகுதியாக இந்திய ராணுவத்தினர் தெற்கு சூடானில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2011 ல் தெற்கு சூடான் தனி நாடாக சுதந்திரம் பெற்றதில் இருந்து அந்நாட்டில் கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. கும்ருக் அருகே ஜோங்லி பகுதியில் 12 இந்திய வீரர்கள் கொண்ட ஐ.நா. அமைதிப் படையினர் ரோந்து சென்ற போது கிளர்ச்சியாளர்கள் குழு திடீரென துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளால் தாக்கினர். 

இதில் லெப்டினன்ட் கர்னல் உட்பட 5 இந்திய ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். லெப்டினன்ட் கர்னல் மஹிபால் சிங், ஹவில்தார்கள் ஹீராலால், பாரத்சஸ்மால், சபேதார், சில்குமார் பால், ஹல் கிஷோர் உள்ளிட்டோர் இறந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தெற்கு சூடானுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலர் பிரதிநிதி ஹில்டர் ஜான்சனுடன் இந்திய தூதர் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இறந்த வீரர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

5 வீரர்களின் மறைவுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதிக்காக இந்திய வீரர்கள் தீரத்துடன் செயல்பட்டு வருகின்றனர் என்று அவர் பாராட்டி உள்ளார். காங்கோ, கோலன் குன்றுகள், தெற்கு சூடான், லெபனான், ஐவரிகோஸ்ட், கிழக்கு தைமூர் பகுதிகளில் ஐ.நா. அமைதி படையின் ஒரு பகுதியாக 7099 இந்திய வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: