முக்கிய செய்திகள்

சாய்பாபாவின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
26  Sai Baba4 0

நகரி, ஏப். 27 - புட்டபர்த்தி சாய்பாபாவின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் நிறுவி ஆன்மீகம் மற்றும் சமூக நலப்பணிகளில் சிறந்து விளங்கிய ஸ்ரீசத்ய சாய்பாபா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார். இதையறிந்ததும் நாடே அதிர்ச்சியில் மூழ்கியது. அவரது உருவப்படத்திற்கு பக்தர்கள் கற்பூரம் ஏற்றியும் தேங்காய் உடைத்தும் பூஜை செய்து வருகின்றனர். பொதுமக்கள் அஞ்சலிக்காக சாய்பாபாவின் உடல் புட்டபர்த்தி பிரசாந்திநிலையத்தில் உள்ள சாய்குல்வந்த் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு பிரபலங்கள், சினிமா நடிகர்கள், சாமியார்கள் மற்றும் பலர் சாய்பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மத்திய மந்திரிகளான விலாஸ்ராவ் தேஷ்முக், பிரபுல் பட்டேல், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, யோகா குரு பாபா ராம்தேவ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர், நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் சாய்பாபாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 

பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு நேற்று மாலை 6 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு இருந்ததால் நள்ளிரவு வரை அஞ்சலி செலுத்த அனுமதி நீடிக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு, கர்நாடகம், ஒரிசா, மாராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சாய்பாபாவின் இறுதிச்சடங்கில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாய்பாபாவின் இறுதிச்சடங்குகள் இன்று காலை 9மணியளவில் உடல் வைக்கப்பட்டிருக்கும் சாய்குல்வந்த் மண்டபத்திலேயே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: