முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசாமி கோவில் அறைகளில் புதையல் கணக்கெடுப்பு

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஏப்.12 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறைகளில் இதுவரை 700 கிலோ எடை கொண்ட 19.50 லட்சம் தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு தங்கச்சங்கிலியில் மட்டுமே 997 வைர கற்கள் பதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் திருவனந்தபுரத்தில் இருக்கும் அருள்மிகு பத்மநாபசாமி கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. எ.முதல் எப். வரை பெயரிடப்பட்டுள்ள இந்த அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளன. பி. அறையைத்தவிர மற்ற 5 அறைகளும் திறக்கப்பட்டு அவற்றில் உள்ள பொக்கிஷங்களை சுப்ரீம்கோர்ட்டு நியமித்த 6 பேர் அடங்கிய குழு மதிப்பீடு செய்து வருகிறது. இதன் விபரம் குறித்து 4 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இதுவரை செய்யப்பட்ட மதிப்பீட்டின் விபர அறிக்கையை சுப்ரீம்கோர்ட்டில் இக்குழு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

சி,டி.இ மற்றும் எப் அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி முடிந்துவிட்டது. எ அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிடும்பணி நடைபெற்று வருகிறது. 216 நாட்கள் கணக்கெடுப்பு நடந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 656 பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. ஒரு நாளில் அதிகப்பட்சமாக 3 அல்லது 4 ஆபரணங்களை மதிப்பிட செய்ய முடிந்தது. ஒவ்வொரு ஆவணத்திலும் குறைந்தது 75 முதல் 300 வரையான வைர கற்கள் பதிக்கப்பட்டிருப்பதால் மதிப்பீடு தாமதமானது. ஒரு ஆபரணத்தை மதிப்பிடுவது 300 பொருட்களை பரிசோதிப்பதற்கு சமம். ஒரு தங்க சங்கிலியின் டாலரில் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு 997 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தங்கச்சங்கிலிகளில் உள்ள டாலர்களில் 100-க்கும் மேற்பட்ட வைர கற்கள் உள்ளன. இதுவரை 19.50 லட்சம் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் எடை 700 கிலோ. இந்த நாணயங்களை மதிப்பிடுவதற்கு குறைந்தது 2 மாத காலமாகும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தங்க நாணயமும் ஏராளமாக உள்ளன. 13-ம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்