புலிகளின் கடற்படை தளபதி சூசையின் இறுதி நேர தகவல்கள்

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

கிளிநொச்சி, ஏப். 13 - தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி சூசையின் இறுதி நேரம் பற்றிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது அதிர்வு இணைய தளம். அதில், 2009 ம் ஆண்டு மே மாதம் 16 ம் தேதி இந்தியாவில் நடைபெற்ற தேர்தலின் முடிவை அறிவிக்கும் நாள். பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அன்றைய தினமே புலிகளுக்கு ஒரு நல்ல செய்தி இந்தியாவில் இருந்து வர இருக்கிறது என்று இந்தியாவில் உள்ள சில தமிழ் உணர்வாளர்கள் ஏற்கனவே ப. நடேசனிடம் கூறியிருந்தனர். ஆனால் அன்றைய நாள் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற செய்தி புலிகளின் தலைவர்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்தது. 16ம் தேதி இரவே கடல் மார்க்கமாக ஒரு உடைப்பைச் செய்து அங்கிருந்து மூத்த தளபதிகளுடன் ஒரு குழு வெளியேற வேண்டும் என்று ரட்ணம் மாஸ்டர் தலைமையிலான சிலர் திட்டங்களைத் தீட்டினர். 

ஆனால் முள்ளிவாய்க்கால் கடல் பரப்பில் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் 1 டோராப் படகை இலங்கை நிறுத்தியிருந்தது. இலங்கை கடற்படையின் வலைப் பின்னலை உடைத்தாலும் அதற்கு அப்பால், இந்திய கடற்படையினர் அங்கே நின்று கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தி ராமேஸ்வரத்தில் இருந்து புலிகளின் முக்கிய புலனாய்வு உறுப்பினர் ஒருவரால் சாட்டிலைட் போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. இச் செய்தி 16 ம் தேதி இரவு கிடைத்தது. இதனால் இலங்கை கடற்படையின் முற்றுகையை உடைக்கும் திட்டம் பூண்டோடு கைவிடப்பட்டது. 

சுமார் 1 கிலோ மீட்டர் சதுரடிப் பரப்பில் அப்போது புலிகள் முடங்கிப்போய் இருந்த காலகட்டம் அது. அவர்களைச் சுற்றி சுமார் 30,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை ராணுவம் கனரக ஆயுதங்களோடு நின்றிருந்தனர். 16 ம் தேதிக்கு முன்னதாகவே புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று கோத்தபாய திட்டங்களை தீட்டியிருந்தார். இந்தியாவில் ஆட்சி மாறினால், சிலவேளை போருக்கு இந்த மத்திய அரசு உதவாது என்பதுதான் அவரது கணக்கு. 

இந்த நிலையில், புலிகளின் மூத்த தலைவர்களை அங்கிருந்து தப்பிக்கச் செய்வதும், அருகில் உள்ள அடர்ந்த காடு ஒன்றுக்குள் அவர்களை செல்ல வைக்கவும், கேணல் ஜெயம் தலைமையிலான வீரர்கள் ஏற்பாடு செய்தனர். 17ம் தேதியன்று முள்ளிவாய்க்காலில் இருந்து நந்திகடல் நோக்கிச் செல்ல ஒரு குழு தயாரனது. ஆனால் அந்த இடத்தை இலங்கை ராணுவம் எளிதில் வேவு பார்க்க முடியும் என்ற நிலை காணப்பட்டது. அத்தோடு வானில் பீச் கிராடிப் என்னும் வேவு விமானம் வட்டமிட்டுக்கொண்டு இருக்கிறது. இதனால் இலங்கை ராணுவத்தின் கவனத்தை திசைதிருப்ப புலிகளின் கடற்படைத் தளபதி அங்கிருந்த மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். அதன்படி சுமார் 2,000 பேர் ஒரு இடத்தில் திடீர் எனக் கூடினர். அவர்கள் அங்கிருந்து ராணுவக் கட்டுப்பாடு இடத்துக்குள் செல்வதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. இதனால் ராணுவத்தின் கவனம் அங்கு திரும்பி இருக்கலாம. ஆனால் இதனைப் பயன்படுத்தி அருகே இருந்த புலிகளின் உயர்மட்ட குழு புறப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் புலிகளின் உயர்மட்டக் குழு ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார்கள் என்று அங்கிருந்த பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். அந்த இடம் நோக்கி இலங்கை ராணுவம் நகர்ந்து வந்துகொண்டு இருப்பதாக, சூசைக்கு தகவல் கிடைக்க மக்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு சூசை கூறியுள்ளார். அப்போது என் மீது நம்பிக்கை வைத்து நான் அழைத்தவுடன் இவ்வளவு பேர் திரண்டு வந்ததற்காக நன்றி என்று மட்டும் சூசை கூறியிருக்கிறார். கடற்கரை ஓரமாக அவர்கள் நடந்து சென்ற 5 வது நிமிடத்தில் ஒரு ஒற்றை துப்பாக்கி சப்தம் மட்டும் கேட்க சூசையை திரும்பிப் பார்த்த பொதுமக்களில் ஒருவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். சூசை சயனைட் அருந்தியும் துப்பாக்கியால் சுட்டும் மரணமடைந்திருக்கிறார். பின்னர் இரவு அந்த இடத்துக்கு வந்த இலங்கை ராணுவத்தினர் டார்ச் லைட் அடித்து சூசை உடலை அடையாளம் கண்டு பிடித்தனர். அப்போது எடுக்கப்பட்ட படம், ராணுவத்தினர் ஒருவரின் மோபைல் போன் ஒன்றில் இருந்து பெறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: