முக்கிய செய்திகள்

பாராளுமன்ற வளாகத்தில் இடதுசாரி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      இந்தியா
Parliament-House-Delhi1 5

 

புதுடெல்லி,ஏப்.27 - எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை விதிக்கக்கோரி இடதுசாரி எம்.பி.க்கள் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். விவசாய பயிர்களில் பூச்சிகளை ஒழிக்க தெளிக்கப்படும் மருந்துகளில் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தும் ஒன்றாகும். இந்த மருந்தை தெளிப்பதால் வேறு புழு உள்பட இதர பூச்சிக்கள் இறந்துவிடுவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால் கேரள மாநிலத்தில் இந்த மருந்தை தெளிப்பதால் பயிர்கள் பாதிப்பதோடு, மண் வளம் பாதிக்கப்படுவதாகவும் மனிதர்களுக்கு கேடுவிளைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில்  திராட்சை செடிகளுக்கு இந்த மருந்தை தெளித்தபோது பலர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு கேரள அரசு அவர்களுக்கு நிவாரணம் வழங்கியதாகவும் தெரிகிறது. பாதிப்பை ஏற்படுத்தும் இந்த எண்டோசல்பான் மருந்தை தடை செய்யக்கோரி கேரளாவில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இடதுசாரி கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள், முக்கியப்பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

இதனையடுத்து நேற்று டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் இடதுசாரி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எண்டோசல்பான் பூச்சி கொல்லி மருந்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று மத்திய அரசை அவர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் கேடு விளைவிக்கும் இந்த மருந்தை தடை செய்யாமல் இருப்பது இதிலும் ஊழல் நடந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும். இந்த மருந்துக்கு எதிர்ப்பு கிளம்பியும் அதற்கு தடை விதிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விஷயத்தையும் அரசியலாக்குவதாக காங்கிரசார் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இந்த பிரச்சினையை மனிதாபிமான பிரச்சினையாக கருதி எழுப்பி வருகிறோம் என்று இடதுகம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சீதாராம் யெச்சூரி ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். எண்டோசல்பான் மருந்துக்கு கேரளத்தில் தடை ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: