முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாமலை பல்கலை.த்தை அரசே ஏற்று நடத்த முடிவு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 16 - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தும் மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலையடுத்து கடந்த ஆண்டு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதனால் பல்கலைக்கழகம் காலவரம்பின்றி மூடப்பட்டது.ஆட்குறைப்பு நடவடிக்கை இல்லை என்று பல்கலைக்கழகம் கூறியது. அத்துடன் பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை குறித்து ஆராய்வதற்காக குழு அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இருப்பினும் நிர்வாக குளறுபடி மற்றும் முறைகேடுகள் இருப்பதால் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டன. 

இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தும் மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். 

இந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:- 

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் சிதம்பரம் அருகே கல்லூரிகளை நிறுவி நடத்தி வந்தார். அதில் ஆங்கிலம், தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உயர்கல்வி போதிக்கப்பட்டு வந்தது. 1928 ஆம் ஆண்டில் அவர் அந்த நிறுவனங்களை அதனுடன் சேர்ந்துள்ள சொத்துக்களுடன் அப்போதைய உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைத்து அண்ணாமலை நகருக்குள் கற்பிக்கும் மற்றும் தங்கியிருந்து படிக்கும் பல்கலைக்கழகத்தினை நிறுவி பராமரிப்பதற்காக ரூ.20 லட்சம் தொகையை கொடுப்பதற்கு சம்மதித்துள்ளார். அதில் அவர் மற்றும் அவருடைய வாரிசுகள் சில அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் பெற உரிமையுடைவர்களாக இருப்பார்கள் என ஒப்புக்கொண்டுள்ளார்.   

அதன்படி, தமிழ்நாட்டில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஒரு தனி வகையாக 1928 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழக சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 1-1929) அண்ணாமலை பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அதனுடைய தோற்றுனராக ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அங்கீகரிக்கப்பட்டிருந்தார். அது முதல் மேற்சொன்ன சட்டத்தின்படி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மற்றும் அவரது வாரிசுகள் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் என்ற முறையில் அந்த சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் மற்றும் சலுகைகளை செயலுறுத்தி வந்தனர். இச்சட்டப்படி, நிறுவனர் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராகவும், பல்கலைக்கழகத்தின் ஒரு அலுவலராகவும் இயங்கி வருகிறார். நிறுவனர் நிலை என்பது மதிப்பு காரணமாக வழங்கப்படுகிற பதவியாக தோன்றுகின்றபோதிலும் கால நிகழ்வுகளின் அடிப்படையிலான அனுபவம் நிறுவனருக்கான வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் மொத்தத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை சுட்டிக் காட்டுகிறது. 

மேற்சொன்ன சட்டத்தின்படி, நிறுவனர் மூன்று பெயர்களை கொண்ட தேர்வு பெயர் பட்டியல் ஒன்றினை வேந்தரிடம் பரிந்துரை செய்யலாம். அவர்களில் ஒருவரை வேந்தர் துணை வேந்தராக நியமனம் செய்வார். அவ்வாறு பணியமர்த்தம் செய்யப்பட்ட துணைவேந்தர் முதன்மை நிர்வாக அலுவலர் என்ற வகையில், எழுத்தர் மற்றும் பிற ஊழியர்களை பணியமர்த்தம் செய்வதற்கு அதிகாரமுடையவராக இருப்பார். மேலும் ஆசிரியர்கள் மற்றும் பதிவாளர் தேர்வு செய்வதற்கான வாரியத்தில் நிறுவனருடன் சேர்ந்து வாரியத்தின் ஒரு உறுப்பினராக இருந்து வருவார். அந்த வகையில் துணைவேந்தர் எப்பொழுதும் நிறுவனரின் விருப்பத்தினை நிறைவேற்றும் கடப்பாடு உடையவராக இருக்கிறார்.

நிறுவனர் பதவி, வாரிசு அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் வகிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. சட்டத்தால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் பரம்பரை வழியாக `தோற்றுநர்' என்ற முறையில் உரிமையை பெற்ற ஒரு தனிநபர் பரிந்துரை செய்யும் துணைவேந்தர் ஒருவரால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அத்தகைய சலுகை, சமூக ஒழுங்கமைவில் அனைவருக்கும் உரிமை என்கின்ற கொள்கை கோட்பாட்டின்படி ஏற்க இயலாததாக உள்ளது. மேலும் அது நல்ல ஆளுகையின் எழுச்சிக்கு எதிராகவும் உள்ளது.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின்போது ஆட்குறைப்பு மற்றும் ஊதியம் குறைத்தல் நடவடிக்கைக்கு அஞ்சி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு உண்ணாவிரதம், வேலை நிறுத்தம், நுழைவாயில் கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டதால் பல்கலைக்கழகத்தில் அமைதியின்மை நிலவியது. மேலும், தேர்வுகள் தள்ளி போடப்பட்டன. ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்திற்கு அரசு பல கோடி ரூபாய் தொகுப்பு நிதி வழங்கி வரும்போதிலும் பல்கலைக்கழகம் எப்பொழுதும் இல்லாத வகையில் நிதிச் சிக்கலை சந்தித்து வருகிறது. இதற்கு பிரதான காரணம் தேவைக்கு அதிகமாக ஊழியர்களை பணியமர்த்தியதும், பிற நோக்கங்களுக்காக பல்கலைக்கழகத்தின் நிதியங்களை பயன்படுத்தியதும், நிதியங்களை வேறு காரியங்களுக்கு மாற்றி பயன்படுத்தியது மற்றும் சட்டப்பூர்வமான கடப்பாடுகளை கடைப்பிடிக்காததும் ஆகும்.

மாணவர்களின் நலத்தை பாதுகாப்பதற்கும், பணியாளர்களின் அச்சங்களை நீக்குவதற்கும் அரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி சார்ந்த மற்றும் பிற முறைகேடுகளை மதிப்பீடு செய்து ஒரு விவர அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்பதற்காக ஒரு தனி தணிக்கை செய்யும் உள்ளாட்சி நிதிக்குழுவை அமைத்தது. மேலும் தனி தணிக்கை செய்யும் குழுவின் தணிக்கை அறிக்கையை பகுத்தாய்வு செய்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்க ஒரு உயர்மட்டக் குழுவையும் அரசு அமைத்தது. 

1928 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழக சட்டத்தில் உள்ள வகையங்கள் மாநிலத்திலுள்ள பிற பல்கலைக்கழக சட்டங்களின் வகையங்களுடன் ஒத்திருக்க கூடியனவாக இல்லை. அண்ணாமலை பல்கலைக்கழக சட்டத்தில் தோற்றுனருக்கு அதிக அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் வழங்கியிருப்பது இச்சட்டத்தின் தனிச் சிறப்பியல்பாகும். இது பல்கலைக்கழகத்தை சீர்கேடான நிர்வாகத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளின் அமைப்பாக்கம் இன்றைய நிர்வாகத்தில் உரித்தம் உள்ளவர்களுக்கு போதிய பங்களிப்பு ஏற்படுத்தும் வகையில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அதுபோன்றே ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் சமுதாய கடப்பாடு அரசுக்கு உள்ளது. மேலும் அண்ணாமலை நகரை சுற்றியுள்ள ஊரக மாணவர்களுக்கு உயர் கல்வியை அளிப்பதனை உறுதி செய்யும் பொருட்டு அரசு தற்போதைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சட்டத்தினை மாநிலத்திலுள்ள பிற பல்கலைக்கழகங்களுக்கு இணையாக சட்ட மாற்றம் கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. 

இச்சட்ட முன் வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது. 

இவ்வாறு அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.    

இதனால் பல்கலைகக்கத்திற்கு அரசு அளிக்கும் சிறப்பு அதிகாரங்கள் இனி வழங்கப்பட மாட்டாது என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்