முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 2 -வது வாரத்தில் வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இதை கணக்கில் வைத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை தேர்வுத் துறை துரிதப்படுத்தி உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 27-ம்தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதினர். தனித் தேர்வர்களாக 48ஆயிரத்து 786 பேர் எழுதியுள்ளனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 66 மையங்களில் விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 20-ம் தேதிதொடங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடங்களை அனைத்து மாணவர்களும் எழுதியுள்ளனர். அதனால் அந்த பாடங்களில் மட்டும் விடைத்தாள்கள் இரட்டிப்பாகஇருக்கிறது. சமூக அறிவியல் பாடங்களையும் அதிக அளவில் மாணவர்கள் எழுதியுள்ளனர். கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட விருப்ப பாடங்களை தேர்வு செய்து எழுதியவர்கள் குறைவான அளவில் உள்ளனர்.

தற்போதைய நிலையில் கணக்கு, இயற்பியல் உள்ளிட்ட விருப்ப பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி பெருமளவில் முடிந்துவிட்டது. இந்தப் பணி ஓரிரு நாளில் முடிந்துவிடும். ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல் பாடங்களின் விடைத்தாள்கள் அதிகமாக இருப்பதால் அவற்றை திருத்தி முடிக்க இன்னும் 5 நாட்கள் தேவைப்படும். இதுவரை திருத்தி முடிக்கப்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள்அந்தந்த மையங்களிலேயே சி.டி.க்களில் பதிவு செய்யப்படும். பின்னர் அந்த சி.டி.க்கள் தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். எல்லா சி.டி.க்களும் வந்து சேர்ந்ததும் அவை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் டம்மி எண்கள் நீக்கப்பட்டு, மாணவர்களின் உண்மையான பதிவு எண்கள்படி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கும். அதற்கு பிறகே தேர்வு முடிவுகள்வெளியிடுவதற்கான பிரதிகள் தயாரிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் அச்சிடும் பணிகளும் தொடங்கும்.

அனைத்து பாடங்களின் விடைத்தாள்களை திருத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை முடிக்க 20 நாட்கள் ஆகும் எனகூறப்படுகிறது. அதன் பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை முன்னதாகவே வெளியிட தேர்வுத் துறை முடிவுசெய்துள்ளது. அதனால் மே 2 வது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்