முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் - மோடி பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர்கள்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

ரூர்கி (உத்தர்கண்ட்), ஏப். 18 - மோடி, ராகுல் காந்தி ஆகிய இருவருமே நாட்டின் பிரதமர் பதவி வகிக்க தகுதியற்றவர்கள் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.  2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பெயரும், பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் பெயரும் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடிவரும் பிரபல சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரேவிடம், பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரில் யார் தகுதிவாய்ந்தவர்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதில் அளித்த அன்னா ஹசாரே,

அவர்கள் இருவருமே பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்றார். வருகிற பாராளுமன்ற பொதுத் தேர்தலில், நல்லவர்களையும் நேர்மையானவர்களையும் எம்.பி. க்களாக தேர்ந்து எடுக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அன்னா ஹசாரே ஜன் தந்திர யாத்திரை மேற்கொண்டு வருகிறார். 

கடந்த மார்ச் 31 ம் தேதி, பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் தொடங்கிய இந்த யாத்திரை, நேற்று முன்தினம் உத்தரகாண்ட் மாநிலத்தை வந்தடைந்தது. ரூர்கியில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய அன்னா ஹசாரே மேலும் கூறுகையில், பிரதமர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, அரசியல் கட்சிகள் அல்ல. 

இந்த யாத்திரையின் நோக்கம் ஆட்சியை மாற்றுவது அல்ல, ஆட்சி அமைப்பு முறையை மாற்றுவதே என்றார். இந்த யாத்திரையில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தலைமை ராணுவ தளபதி வி.கே.சிங் கூறுகையில், மத்தியில் தற்போது நடைபெறும் ஆட்சி இதுவரை பதவி வகித்த அரசுகளில் மிகவும் மோசமான ஊழல் அரசு என்றும், அதிகமான பேராசை கொண்ட மக்களை பாதித்த அரசு என்று வி.கே.சிங் கூறினார். நாட்டை வழிநடத்துவதற்கான வழிகாட்டும் கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்காக வருகிற செப்டம்பர் மாதத்தில் மக்கள் பாராளுமன்றம் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்த அவர், இதில் பொது மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்