முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி ஈழம் - கருணாநிதிக்கு விஜயகாந்த் கடும் கண்டனம்

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.28 - 25 ஆண்டுகள் மத்தியில் பங்கு வகித்த கருணாநிதி இன்று தனி ஈழம் தி.மு.க.வின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு என்று விஜயகாந்த் காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கள இனவெறி அரசின் தமிழினப் படுகொலை குறித்து ஐ.நா. சபையின் ஆய்வறிக்கை சம்பந்தமாக தே.மு.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

ஆயுதம் தாங்காத சாதாரண பொது மக்கள் மீது சிங்கள இராணுவம் வெடிகுண்டுகள் வீசிக் கொன்றது எனவும், மருத்துவ மனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்விக் கூடங்கள் போன்ற பொதுமக்கள் கூடியுள்ள இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன எனவும், காயமுற்றோருக்கு மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டன என்றும், உள்நாட்டில் அகதிகளாக உள்ள தமிழர்களும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்ற சந்தேகத்திற்குரியவர்களும் கொடுமைப்படுத்தப்பட்டு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன எனவும், ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை தந்துள்ளது.

இலங்கை அரசு எவ்வளவோ முயற்சித்தும் இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க முடியவில்லை. கடந்த திங்கட்கிழமையன்று ஐ.நா. மன்றம் இந்த அறிக்கையை வெளியிட்டது. ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூன் அவர்கள் இந்த போர்க் குற்றம் பற்றி சர்வதேச குற்ற விசாரணை மன்றத்திற்கு உறுப்பு நாடுகள் அல்லது ஐ.நா. பாதுகாப்பு குழுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்த பொழுதே இவை பற்றி நாம் எச்சரித்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் இலங்கையின் முப்படையினரும் 60,000 தமிழர்களை கொன்று குவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தோம். தற்போதைய ஐ.நா. சபையின் அறிக்கை சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. அந்த காலக் கட்டத்தில்தான் தமிழக முதலமைச்சர் கருணாநிதி இடைவேளை உண்ணாவிரத நாடகம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கள இனவெறி அரசு இத்தகைய தமிழினப் படுகொலை நடத்துவதற்கு இந்தியா உறுதுணையாக இருந்தது என்பதே உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த கருத்தாகும். ஏற்கனவே சர்வதேச அரங்கில் சிங்கள இனவெறி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட பொழுதெல்லாம் இந்திய அரசுதான் தலையிட்டு காப்பாற்றி உள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மீறல் குழுவினர் இலங்கையை கண்டித்து தீர்மானம் கொண்டு வந்தபொழுது இந்திய அரசுதான் அதைத் தடுத்தது. அதே போன்று சர்வதேச நிதியத்தின் மூலம் இலங்கை அரசுக்கு நிதி வழங்க உலக நாடுகள் மறுத்தபோது, இந்திய அரசு அளித்த உத்தரவாதத்திதன் பேரில்தான் சிங்கள் இனவெறி அரசுக்கு நிதி உதவி கிடைத்தது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கண்ட பொழுதெல்லாம் இந்திய அரசுதான் தலையிட்டு சிங்கள இனவெறி அரசைக் காப்பாற்றியது. அப்பொழுதெல்லாம் ஏன்  கருணாநிதி காங்கிரசின் இந்த செயல்பாட்டை தடுத்து நிறுத்தவில்லை? எனவே, மத்திய அரசின் ஆட்சியில் பங்கு வகிக்கும் தி.மு.கவிற்கும் சிங்கள இனவெறி அரசைக் காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும்.

தற்பொழுது ஐ.நா. மன்றமே சிங்கள இனவெறி அரசு மனித உரிமை மீறி இருக்கிறது என்றும், அதிபர் மகிந்தே ராஜபக்சே போர்க் குற்றவாளி என்றும் அறிவித்திருக்கிறது. இந்த போர்க் குற்றங்களுக்காக இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் சிங்கள அரசின் இனவெறி அதிபர் ராஜபக்சேயையும், அதன் இராணுவத்தையும் போர்க் குற்றம் புரிந்தவர்களாக வழக்குத் தொடுக்க வேண்டிய தீர்மானத்திற்கு இந்திய அரசு இப்பொழுதாவது ஆதரவளித்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும், தனக்கும் பற்று இருக்கிறது என்பதை இந்திய அரசு நிரூபித்து காட்ட வேண்டும். இது உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, இந்தியாவிலேயே அதன் ஒரு பகுதியாகிய உள்ள தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பும் இதுதான். இன்றைய இந்திய அரசு வழக்கம்போல் சிங்கள இனவெறி அரசை ஆதரிக்கப் போகிறதா அல்லது உலகம் போற்றும் மனித உரிமைகள் பக்கம் இருக்கப் போகிறதா? இந்திய அரசு வழக்கம்போல் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால்  கருணாநிதி  அதை எதிர்ப்பாரா? அல்லது மத்திய அரசின் துதிபாடியாக வழக்கம்போல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்றைய முதலமைச்சர்  கருணாநிதி இந்திய அரசில் ஜனதா தளத்தின் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றைய காங்கிரஸ் ஆட்சி வரை மத்திய அரசின் ஆட்சியில் சுமார் 25 ஆண்டுகள் பங்கு பெற்றுள்ளார். அப்பொழுதெல்லாம் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தனி ஈழம்தான் தீர்வு என்பது தெரியவில்லையா? அங்குள்ள தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டு அவர்கள் வாழும் பகுதிகள் சீரழிக்கப்பட்டுள்ளன. ஒன்றும் தெரியாதவர்போல் இன்று தமிழ் ஈழம்தான் தி.மு.கவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு? உண்மையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு துணை போய்விட்டு, இன்றும் nullலிக் கண்ணீர் வடிப்பது தமிழர்களை இன்னும் தொடர்ந்து ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கையிலா?  கருணாநிதி நடத்தும் கபட நாடகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

ஆட்சி உங்கள் கையில், அதிகாரம் உங்கள் கையில், செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும்  கருணாநிதி பச்சோந்தியைப் போல் நடந்து கொள்வது உலகத் தமிழர்களை ஏமாற்றும் நயவஞ்சகம் அல்லவா? அரசியலில் அனுபவம் வாய்ந்தவர்கள் இன்றைய இளைய தலைமுறையினர்க்கு நல்வழி காட்ட வேண்டும். அவர்களே பொய்யும், புரட்டும் கலந்து தவறான பாதையில் இளைஞர்களை வழி நடத்தலாமா?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்