முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணிக்க மூக்குத்தி மீனாட்சிக்கு இன்று திருக்கல்யாணம்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.23 - மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இந்த கண்கொள்ளா காட்சியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் திரளுகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சிஅம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று மீனாட்சி அம்மன் திக்விஜயம் நடந்தது. திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. திருக்கல்யாண வைபவத்திற்காக கோவிலுக்குள் ஆடிவீதிகளில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு குளிர்சாதன வசதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஆடி வீதி முழுவதும் டிவிக்கள் வைக்கப்பட்டு திருக்கல்யாண திருகாட்சி ஒளிபரப்பப்பட உள்ளது.

திருக்கல்யாணத்திற்காக வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 8.17 மணியில் இருந்து 8.41மணிக்குள் ரிஷப லக்கனத்தில் மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முன்னதாக சுவாமியும், ப்ரியாவிடை, மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் அதிகாலையில் அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பையர், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்து பின் முத்துராமைய்யர் மண்பத்தில்  கன்னி ஊஞ்சலாடுகின்றனர். பின்னர் திருப்பரங்குன்றத்தில் உள்ள சடங்கு சுந்தரரும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்பத்திற்கு எழுந்தருளுவர். மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மேடைக்கு மணமகன் சுந்தரேசுவரரும், மணமகள் மீனாட்சியும் எழுந்தருளுவார்கள்.

    திருக்கல்யாணத்தன்று மட்டும் சுவாமிக்கு திருஷ்டி பொட்டு வைக்கப்படும். திருக்கல்யாண நிகழ்ச்சியில் குலசேகர பட்டர் வழிச்சிவாச்சாரியார் சுந்தரேசுவரராகவும், உக்கிரபாண்டி பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் அணிந்து திருக்கல்யாணத்தை நடத்துவார்கள். மீனாட்சிஅம்மன் சார்பாக உள்ள சிவாச்சாரியார் சுவாமிக்கு பாதபூஜை செய்வார். பின்னர் காப்பு கட்டிய பட்டர் விக்னேஷ்வர பூஜை, பூண்ணியாகவானம்,  பஞ்சகவ்யம், கலச பூஜைகள் செய்வார். கலச பூஜையில் வினாயகர், பிரம்மா, மகாவிஷ்ணு, சோமன், உமாமகேஸ்வரி தங்குவதாக ஐதீகம். பின்னர் பாலிய பூஜை, ஹோமம், மாங்கல்ய பூஜை போன்றவை நடைபெறுகிறது. இதைதொடர்ந்து சுவாமி,ப்ரியாவிடை, அம்பாளுக்கு காப்பு கட்டப்படும். சுவாமி, அம்பாள் 3 முறை மாலை மாற்றிக்கொள்வர். அதன் பின்னர் சுவாமி,ப்ரியாவிடை, மீனாட்சி  அம்மனுக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்படும். வேதமந்திரங்கள் விண்ணை பிளக்க கெட்டிமேளம் முழங்க மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு, சுந்தரேசுவர கடவுள் வைர திருமாங்கல்யத்தை பூட்டுகிறார். அப்போது மீனாட்சி திருக்கல்யாணத்தை தரிசிக்கும் பெண் பக்தர்கள் தாங்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தை மாற்றி புதிய மஞ்சள் கயிற்றில் கட்டு கொள்வார்கள். இதன் பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமியும்,அம்பாளும் எழுந்தருளி பக்தர்கள் வெள்ளத்தில் நீந்திய படி பழைய திருக்கல்யாண மண்டபத்திற்கு அடைவார்கள்.

   திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் திருக்கல்யாண பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  இன்று மதியம் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கயாண விருந்து நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்