முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளழகர் விழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      ஆன்மிகம்
Image Unavailable

தேனி,ஏப்.22 - மதுரையில் வரும் 25-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவினை முன்னிட்டு வைகை அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.இதன் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 25-ஆம் தேதி (வியாழக்கிழமை) கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவை முன்னிட்டு வைகை அணையிலிருந்து 5 நாட்கள் 625 மில்லியன் கன அடி  தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதனை அடுத்து வைகை அணையில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவிற்காக நேற்று முன்தினம் காலையில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.அணையில் இருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மதுரை நகருக்கு தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதற்காக 5 நாட்களுக்கு முன்னதாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.மதுரை மாநகர் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கும் சேர்ந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 60 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்த தண்ணீரை மதுரை,ராமநாதபுரம்,மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தவும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.முதல் 2 நாட்களுக்கு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதமும்,மீதமுள்ள 3 நாட்களில் தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வைகை அணையில் செயல்படும் வைகை நுண்புனல் மின்நிலையத்தில் மின்சார தயாரிப்பும் தொடங்கி உள்ளது.வைகை அணையில் செயல்படும் இரண்டு மின் திட்டங்களையும் சேர்ந்து ஒரு நாளைக்கு 144 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.ஏற்கனவே போதுமான மழையின்றி குறைவாக காணப்படும் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேலும் அணையின் நீர்மட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.அணைக்கு வினாடிக்கு 5 கன அடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையின் மொத்த நீர் இருப்பு 1,432 மில்லியன் கன அடியாக காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்