முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ரேஸ்கோர்சில் உள்விளையாட்டு அரங்கம்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆப்.23- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை ரேஸ்கோர்ஸ்சில் அமைந்துள்ள டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ  முன்னிலையில்,  பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் முனைவர்.வைகைசெல்வன்  திறந்து வைத்து, இறகுப்பந்து விளையாட்டு மைதானத்தில் முதல் இறகுபந்து விளையாட்டை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சிக்கு  தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையனும், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போசும் முன்னிலை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சியில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ  பேசும் பொழுது தெரிவித்ததாவது:

    மனிதனின் வாழ்க்கைக்கு விளையாட்டு என்பதும், உடற்பயிற்சி என்பதும் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.  நான் ஏறக்குறைய 10 ஆண்டுகள் மெல்லோட்ட மையத்தில் நடைபயிற்சி மேற்கொண்டு இருக்கிறேன்.  உயர்ந்தவர், தாழ்ந்தவர், சாமானியர், அரசு உயர்அலுவலர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமமாக, தோழமை உணர்வுடனும், நட்புணர்வுடனும் ஒரு சேர கூடும் இடம் இந்த மெல்லோட்ட மையமாகும்.  ஏற்றத்தாழ்வுகளை களைந்து எரிகின்ற இடமாக இந்த இடம் திகழ்கிறது.  நான், இந்த மெல்லோட்ட மையத்தில் உள்ள அனைவருடனும் உற்ற தோழனாக, சகோதரனாக என்றென்றும் இருப்பேன்.  இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து பெருமைப்படுத்தியதற்கு மெல்லோட்ட மைய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

   இந்நிகழ்ச்சியில்  பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் முனைவர்.வைகைசெல்வன்  பேசும் பொழுது தெரிவித்ததாவது: ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற உடல் அளவிலும், மனதளவிலும், அறிவார்ந்த செயல்பாட்டிலும் முழுமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.  உடல் அளவில் என்பது நல்ல உடற்பயிற்சியும், நடைபயிற்சியும் மேற்கொண்டு உடல் அளவில் வலுவுள்ளவர்களாக இருக்க வேண்டும். உப்பு, புளி, காரம் இல்லாத உணவையே உண்ண வேண்டுமென வள்ளலார்  கூறியுள்ளார். ஒரு மனிதனின் வாழ்நாளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது அவருடைய இடுப்பை சுற்றியுள்ள வயிற்றுப் பகுதியாகும்.  தொந்தி மரணத்திற்கு விடுக்கும் தந்தி.  

இரண்டாவதாக மனப்பயிற்சி, மனம் என்பது எப்போதும் சந்ததேகப்பட்டு கொண்டே இருக்கும்.  இந்த மனதை கட்டுப்படுத்தி ஒரே புள்ளியில் வைக்க வேண்டும்.  மூன்றாவதாக அறிவு.  அறிவுடையார் எல்லாம் உடையார்.  அறிவு அற்றம் காக்கும் கருவி என்று அய்யன் வள்ளுவரே கூறியுள்ளார்.  ஆகவே, உடலளவிலும், மனதளவிலும், அறிவார்ந்த அளவிலும் ஒரு மனிதன் முழுமையடைந்தால், அவன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது மிகவும் எளிதாகி விடுகிறது.  அந்த வகையிலே உடல் அளவில் ஒரு மனிதனை வலுவாக்குகின்ற இந்த விளையாட்டு அரங்கை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  அனைவரும் இந்த விளையாட்டு அரங்கை நல்லமுறையில் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றார்.

   இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.முத்துராமலிங்கம் (திருமங்கலம்), திரு.சுந்தர்ராஜன் (மதுரை மத்தியம்), மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் புதூர்.அபுதாகிர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மெல்லோட்ட மைய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.முருகன் வரவேற்புரையாற்றினார்.  முடிவில் மெல்லோட்ட மைய இணைச்செயலாளர் சேகர்  நன்றிகூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்