முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்மபுரி சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்  எம். ஆறுமுகம்   தர்மபுரி நிகழ்வு குறித்து எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர்  ஜெயலலிதா பதில் அளித்து பேசியதாவது:-

தருமபுரி மாவட்டம், நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் (ஆதிதிராவிடர்) என்பவர் செல்லன்கொட்டாயைச் சேர்ந்த நாகராஜன் (வன்னியர்) என்பவரது மகள் திவ்யாவை காதலித்து, 8.10.2012 அன்று திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து, அவர்கள் 15.10.2012 அன்று சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் முன்பு சரணடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தபோது, திவ்யாவின் பெற்றோர்கள் விசாரணைக்கு வரவில்லை. இத்திருமணத்தை எதிர்த்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள், 04.11.2012 மற்றும் 05.11.2012 அன்று  நாயக்கன்கொட்டாயில் கூட்டம் நடத்தி, காலனியைச் சேர்ந்த பெரியவர்களிடம் திவ்யாவை அவரது பெற்றோரிடம் அனுப்பிவைக்க வேண்டுமென வற்புறுத்தினர். ஆனால், திவ்யா அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நாயக்கன்கொட்டாயில் அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம், 06.11.2012 அன்று காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், திவ்யாவின் திருமணத்தால் மனமுடைந்த அவரது தந்தை நாகராஜன்ஞு 07.11.2012 அன்று அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த வன்னியர்கள் நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டாம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களின் வீடுகள், வீட்டுப் பொருட்கள், வாகனங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியதுடன், தீயிட்டும் கொளுத்தினர். வன்னியர்களில் ஒரு பிரிவினர் நாகராஜின் உடலை நாயக்கன்கொட்டாயில் தருமபுரி- திருப்பத்தூர் பிரதான சாலையில் வைத்து தர்ணாவில் ஈடுபட்டனர். 

தகவலறிந்தவுடன், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு தருமபுரி) தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடம் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேற்கு மண்டல காவல்துறை தலைவர் மற்றும் காவல்துறை துணைத் தலைவர் ஆகியோரும் போதுமான காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான காவல் பாதுகாப்பு அளித்து, மேலும் அப்பகுதியில் சம்பவங்கள் ஏதும் நடவாமல் பார்த்துக் கொண்டனர். இச்சம்பவங்கள் தொடர்பாக, வன்னியர் உட்பட இதர இனத்தைச் சேர்ந்தவர்கள் மீது கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் 7 வழக்குகளும், ஆதிதிராவிடர்கள் மீது 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் வன்னியர் மற்றும் இதர சாதியைச் சேர்ந்த மொத்தம் 142 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஆதிதிராவிட அமைப்புகள் இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவ்வமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் தேசிய ஆணையத் தலைவர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மேற்படி காலனி மக்களை சந்தித்தனர். 

இவ்வழக்குகள் அனைத்தும் 18.11.2012 அன்று மாநில குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அத்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு மேலும் 37 எதிரிகளை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். இவ்வழக்குகளில் 179 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 149 பேர் நீதிமன்ற பிணையில் வெளி வந்துள்ளனர். 

தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 42 கிராமத்தினைச் சேர்ந்த வன்னியர் மற்றும் இதர இனத்தவர்கள் அம்மாவட்டத்தில் அமலிலுள்ள தடை உத்தரவை நீக்கக்கோரி, தங்கள் வீடுகளிலும் (2,900) பொது இடங்களிலும் 13.01.2013 மற்றும் 14.01.2013 ஆகிய தினங்களில் கருப்புக் கொடிகளை ஏற்றினர்.

இச்சம்பவத்தையடுத்து, அம்மாவட்டத்திலுள்ள ஐந்து தாலுக்காக்களைச் சேர்ந்த 88 கிராமங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144(1) - ன் கீழ் மாவட்ட ஆட்சியர் 13.12.2012 முதல் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தார். பின்னர், மாவட்ட நிர்வாகம் 25.01.2013 அன்று, 80 கிராமங்களில் மேற்படி தடை உத்தரவு விலக்கிக்கொண்டதையடுத்து, 8 கிராமங்களில் மட்டும் தற்போது தடை உத்தரவு அமலில் உள்ளது.

இதற்கிடையில், நத்தம் காலனியைச் சேர்ந்த மங்கை (எ) மங்கம்மாள் என்பவர், 29.11.2012 அன்று உடல்நிலை சரியில்லாமல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், 03.12.2012 அன்று உயிரிழந்தார். அவரது தந்தை அன்பு, தனது மகள், நத்தம் காலனி சம்பவத்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இறந்தவிட்டதாக புகார் தெரிவித்தார். இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு ஆதிதிராவிட அமைப்புகள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும், உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் போராட்டங்கள் நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆதிதிராவிட அமைப்பு தலைவர்களோடு 07.12.2012 அன்று, நடத்திய பேச்சுவார்த்தையடுத்து, அவர்கள் 08.12.2012 அன்று இறந்து போன மங்கையின் உடலை மருத்துவமனையிலிருந்து பெற்றுக் கொண்டனர்.

7.11.2012 அன்று நடைபெற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

பாதிக்கப்பட்ட மக்கள் கோவிலிலும், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டனர். 07.11.2012 இரவு முதல் 17.01.2013 வரை ரூ.16,27,061/- மதிப்பில் தினசரி  உணவு வழங்கப்பட்டது.  தற்காலிக தங்குமிடம் 08.11.2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் நிரந்தர  நிவாரண தங்குமிடம் ரூ.21,50,000/- செலவில் கட்டப்பட்டது. கூடுதலாக ஒரு நிரந்தர தங்குமிடம் ரூ.4,50,000/- செலவில் கட்டப்பபட்டது.

 08.11.2012 அன்று ரூ.3.29 லட்சம் செலவில் 1 செட் உடைகளும், சமையல் பாத்திரங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. பாய், சால்வைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன. குடிநீர் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தால் ரூ.8,45,000 செலவில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் வசதிகள் செய்யப்பட்டது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் குழு அமைக்கப்பட்டன.பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய நோட்டு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. 

புதிய வழித்தடம்  வழியாக பேருந்துகள் விடப்பட்டது. இத்தனை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. 

பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு 326 குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000/- வீதம்ரூபாய் ஒரு கோடியே அறுபத்து மூன்று லட்சம்  09.11.2012, 23.11.2012 மற்றும் 03.12.2012 ஆகிய தேதிகளில்  வழங்கப்பட்டது.   

7.11.2012 அன்று ஆதிதிராவிட மக்களின் வீடுகளை சேதப்படுத்தியதற்காக கூடுதலாக 99 பசுமை வீடுகள் கட்ட இரண்டு கோடியே அறுபத்தி ஏழு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயை (ரூ.2,67,30,000/-) அனுமதித்து 22.1.2013-ல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி உள்ளிட்ட நான்கு கிராமங்களில்  07.11.2012 அன்று ஆதிதிராவிடர் மக்களின் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம்   தொடர்பாக   பாதிக்கப்பட்ட   1200  ஆதிதிராவிட   மக்களுக்குக்   கூடுதல்   நிவாரணம் அளிக்க ஏதுவாக  ரூபாய் ஏழு கோடியே முப்பத்து இரண்டு லட்சத்து ஏழாயிரத்து எழுநுாற்று பதினைந்து (ரூ.7,32,07,715/-) நிதி  ஒப்பளிப்பு செய்து  24.01.2013-ல் ஆணைகள் வெளியிடப்பட்டது. 

அரசு உத்தரவின்பேரில், மாவட்ட நிர்வாகம், பாதிக்கப்பட்ட ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் துணி வகைகள் வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிதியிலிருந்து வீடுகட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ்ஞு என்பவரும், வழக்கறிஞர் செங்கொடி மற்றும் சிலர் நத்தம் காலனி சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை விசாரணை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர். 

 இவ்வழக்குகளை பல்வேறு நாட்களில் விசாரித்த உயர்நீதிமன்றம் 18.03.2013 அன்று இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டு, மனுக்களின் மீதான விசாரணையை 27.03.2013-க்கு ஒத்தி வைத்தது. 

இதனையடுத்து, தருமபுரி மாவட்டஆட்சியர், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை குறித்த அறிக்கையை 27.03.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 5.4.2013 அன்று, உள்துறை செயலாளர், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தனித்தனியே பதில் மனு தாக்கல் செய்தனர். அன்றைய தினம் நீதிமன்றம் வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றக் கோருவது தொடர்பாக, பதில் மனு தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 22.04.2013-க்கு ஒத்தி வைத்துள்ளது. 

நத்தம் காலனி சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தற்போது மாநில குற்றப் பிரிவு புலனாய்வுத் துறையில் சில எதிரிகளை கைது செய்வதற்காகவும், ஆவணங்கள் சேகரிப்பதற்காகவும், நிபுணர்களின் அறிக்கை பெறவும் வேண்டி புலன் விசாரணையில் உள்ளன. 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்