முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளை கடத்தினால் குண்டர் சட்டம்: முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - ஆக்கப்பூர்வாக விமர்ச்சித்தவர்கள், அவர்கள் சுட்டிக்காட்டிய குறைகள் பரிசீலிக்கப்படும் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா, நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளன என்றும், குழந்தைகளை கடத்துபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், காவலில் வைக்கப்படுவர் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-   

காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது பேசிய உறுப்பினர்கள் இந்த அரசின் நடவடிக்கைகளை, திட்டங்களை ஆதரித்தும், விமர்சித்தும் பேசியிருக்கிறார்கள். காவல் துறை மானியத்தில் 69 வெட்டுத் தீர்மானங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியத்தில் 48 வெட்டுத் தீர்மானங்களும் உறுப்பினர்களால் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 

காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது உறுப்பினர்கள் தங்களது மேலான கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். இந்தக் கருத்துகளின் அடிப்படையிலும், வெட்டுத் தீர்மானங்களில் உள்ள சாராம்சங்களின் அடிப்படையிலும் நான் எனது கருத்துகளை இந்த மாமன்றத்திற்கு எனது பதிலுரையின் மூலம் எடுத்துரைக்க விரும்புகிறேன். 

குணங்களையும், குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதை அறிந்து அதன் அடிப்படையில் ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும் என்றார் வள்ளுவப் பெருந்தகை.  

`குறைகள் குறைய வேண்டும்; நிறைகள் நிறைய வேண்டும்' என்ற அடிப்படையிலேயே எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. குறைகள் இல்லை என்று சொல்லவில்லை; அதே சமயத்தில் குறைகள் மிகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கு இல்லை. எந்த திட்டமாக இருந்தாலும் சரி, எந்த துறையின்  நடவடிக்கையாக இருந்தாலும் சரி, செயல்பாடாக இருந்தாலும் சரி, நிறை, குறை இரண்டும் இருக்கத்தான் செய்யும்.  இது காவல் துறைக்கும் பொருத்தமானது தான். திட்டத்தினால் பயன் பெற்றவர்கள் அரசை, அரசின் துறைகளை, திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகளை பாராட்டுவார்கள். திட்டங்களினால் பயன் அடையாதவர்கள் திட்டங்களையும் அரசையும் விமர்சனம் செய்வார்கள். இது தான் மனித இயல்பு.  அரசின் பிற துறைகளைப் பொறுத்தவரை திட்டங்களினால் மக்கள் நேரிடையாக பயன் பெறும் நிலை உள்ளது. எனவே, இதற்காக திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பாராட்டு பெறுவது என்பது இயற்கையானது தான். ஆனால், காவல் துறையைப்  பொறுத்த மட்டில், திட்டங்களால், செயல்பாடுகளால் கிடைக்கப் பெறும் பயன்களை சாதாரணமாக நேரடியாக உணர இயலாது.  எனவே தான், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளில், அங்குள்ள மக்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அவர்களின் உடமைகள் கள்வர்களால் களவாடப் படாமல் காக்கும் காவல் துறையினரின் பாதுகாப்புப் பணி மக்களுக்கு நன்மை செய்யும் பணியாக பெரும்பாலும் உணரப்படுவதில்லை.  இது போன்ற நிகழ்வுகளில் ஒன்றிரண்டு திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்தால் கூட காவல் துறையின் பணி விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இதே போன்று, போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை மேற்கொள்ளப்படும் போது, இவற்றின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் மற்றும் போராட்டம் நடத்துவோர் என இரு சாராரும் காவல் துறையினரை சாடுகின்றனர். எனவே தான், வேறு எந்த மானியக் கோரிக்கை மீதான  விவாதத்தின் போதும் இல்லாத வகையில், காவல் துறை மானியக் கோரிக்கையின் போது விமர்சனங்கள் அதிகம் வைக்கப்படுகின்றன.  பாராட்டுகள் என்பது அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

நிறை, குறைகள் மிகைபடாமல் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு தூய நோக்கத்துடன் எடுத்துரைக்கும் ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை நான் வரவேற்கிறேன்.  அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் என்னிடம் உண்டு. அதே சமயத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, உண்மைக்கு புறம்பானவற்றை சொல்வது,  சிறிய விஷயத்தைக் கூட பூதாகரமாக்கிச் சொல்வது, நிறைகளை இருட்டடிப்புச் செய்வது போன்ற விமர்சனங்களை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. 

மற்றவர்கள் மீது அவதூறு பேசுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவர் சாக்ரடிஸைப் பார்த்து, ாஉங்களுக்கு ஒரு சேதி தெரியுமா?ா என்று கேட்டார்.  

இதற்குப் பதிலளித்த சாக்ரடீஸ், `நீங்கள் சொல்ல வரும் செய்தி முற்றிலும் உண்மை என்று உங்களால் கூற முடியுமா?' என்று கேட்டார். 

அவதூறு பேசும் மனிதரின் பேச்சில் இருந்த வேகம் குறைந்தது. 

`நீங்கள் சொல்லப் போவது சமூகத்திற்கு பயன் அளிக்கக்  கூடியதா?' என்று அந்த மனிதரைப் பார்த்து மீண்டும்  ஒரு கேள்வி  கேட்டார் சாக்ரடிஸ். 

அதற்கு அந்த மனிதர் `இல்லை' என்று சொன்னார். 

உடனே சாக்ரடிஸ், `இதை தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ, சமூகத்திற்கோ இழப்பு உண்டா?' என்று வினவினார்.  

அதற்கு அந்த மனிதர், `அப்படி கூற முடியாது' என்று கூறினார். 

`எதை உண்மை என்று உறுதியாகக் கூற முடியாதோ, அதனால் நம் சமூகத்திற்கு எவ்விதப் பயனும் இல்லையோ, அதை அறிந்து கொள்ளாததால் நமக்கு இழப்பில்லையோ, அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை' என்றார் சாக்ரடிஸ். 

இது போன்று, விமர்சிக்க வேண்டும், இந்த அரசின் மீது குற்றம் சாட்ட வேண்டும், குறை கூற வேண்டும், அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் உண்மைக்கு புறம்பாக இங்கே இந்த அவையிலும், அவைக்கு வெளியே பொதுமக்களின் மத்தியிலேயும்  தெரிவிக்கப்பட்ட கருத்துகளைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை.  ஏனெனில் இவர்கள் எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த அரசின் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற அடிப்படையில் தங்கள் வாதத்தை - இல்லை, இல்லை -  விதண்டாவாதத்தை, முன் வைப்பவர்கள். குறைகளைச் சுற்றியே வட்டமிடுபவர்கள். நிறைகளை குறைத்து மதிப்பிடக் கூடியவர்கள். குறைகளை ஊதி ஊதி பெரிதாக்கக் கூடியவர்கள். 

அதே சமயத்தில் அவர்கள் கூறும் குறைகளில், குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால், அவற்றை களைய இந்த அரசு முனைப்புடன் செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  வசவுகள் நீடித்து நிலைக்காதவை. விருப்பு, வெறுப்பற்ற  கருத்துகளே வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள் நாங்கள். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை தெரிவித்தவர்களின் கருத்துகள், அவர்கள் சுட்டிக் காட்டிய குறைகள் நிச்சயம் இந்த அரசால் பரிசீலிக்கப்பட்டு அவற்றை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை இந்தத் தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.  

எங்களைப் பொறுத்த வரையில், தடுக்கப்படக் கூடிய குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்,  குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும், குற்றம் புரிந்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.   

இங்கே பேசிய ஒரு சில உறுப்பினர்கள், குற்றங்கள் அதிகரித்து விட்டதாக குறிப்பிட்டார்கள்.  ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் 

சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டது; கொலைகள், குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது; என்றெல்லாம் அவைக்கு வெளியே அவதூறு பரப்பி வருகிறார்கள். 

நான் அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த அரசு பதவியேற்றது முதல், தமிழக காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்ற நிகழ்வுகளை தடுத்து வருகின்றனர். மேலும் குற்ற நிகழ்வுகளில் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து, அவர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து, தண்டனை பெற்று தருவதிலும் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, குற்ற விகிதம் அதாவது, ஒரு லட்சம் மக்களுக்கு நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

2008 ஆம் ஆண்டு காவல் துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, `குற்றங்களை பொதுவாகப் பரந்த நோக்கத்தோடு பார்க்க வேண்டும்.  சென்ற ஆண்டு, இந்த ஆண்டு என்று குறுகிய நோக்கத்தோடு பார்த்தால் அதிலே பயன் இல்லை, 4, 5 ஆண்டுகளில் நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கணக்கிடவேண்டும்'  என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு குற்ற விகிதம் குறைந்ததோடு மட்டுமல்லாமல் பல வகைப்பாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும், பல ஆண்டுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் குறைந்துள்ளது. 

உதாரணமாக, எனது முந்தைய ஆட்சியின் இறுதியில், 2005-ல், கொலைகளின் எண்ணிக்கை 1,366 ஆக இருந்தது.  இந்த எண்ணிக்கை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் இறுதியில், 2010-ல் 1,715 ஆக உயர்ந்தது. இதே போல், ஆதாயக் கொலைகள் 74-ல் இருந்து 153 ஆக உயர்ந்தது. அந்த ஐந்தாண்டு காலங்களில், 

தி.மு.க. ஆட்சியில் கொலை வழக்குகள் 25.5 விழுக்காடும், ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை 106.75 விழுக்காடும் அதிகரித்துள்ளது. அதாவது, முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 5.1 விழுக்காடு கூடியுள்ளது. 

ஆனால், எனது தலைமையிலான ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு 1,747 கொலைகளும், 2012 ஆம் ஆண்டு 1,806 கொலைகளும் நடந்துள்ளன. இதை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் கொலைகளின் அதிகரிப்பு 2 விழுக்காடு குறைவாகவே உள்ளது. 

ஆதாயக் கொலைகள் என்பது மிகக் கொடியவை ஆகும்.  2010 ஆம் ஆண்டு 

153 என்று இருந்த ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை, 2011 ஆம் ஆண்டு 

123 ஆகவும், 2012 ஆம் ஆண்டு 137 ஆகவும் இருந்தது. 2010 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியுடன் ஒப்பிடும் போது, 2012 ஆம் ஆண்டு ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை 10.45 விழுக்காடு குறைந்துள்ளது. எனது தலைமையிலான ஆட்சியில்  ஆண்டிற்கு 5.2 விழுக்காடு என்ற அளவுக்கு ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு நேர் மாறாக, திமுக ஆட்சியின் போது, ஆண்டிற்கு சராசரி 21.3 விழுக்காடு ஆதாயக் கொலைகள் அதிகரித்து  இருந்தது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 123 ஆதாயக் கொலைச் சம்பவங்களில் 96 சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, களவு போன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 137 சம்பவங்களில், 112 சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு களவு போன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை நடைபெற்ற 37 சம்பவங்களில், 30 சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  களவு போன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.  

கொலை சம்பவங்களில், பெரும்பாலானவை குடும்ப பிரச்சினைகள், காதல் விவகாரங்கள், வாய்த் தகராறு, நிலப் பிரச்சினைகள் ஆகியவற்றின் காரணமாக நடைபெற்றுள்ளன. திடீரென ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் காரணமாகவே, இது போன்ற கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.  

உதாரணமாக, சமீபத்தில் நடந்த ஒரு கொலை குற்ற நிகழ்வை எடுத்துக் கூற விரும்புகிறேன்.  பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை பார்த்து ஒய்வு பெற்ற 70 வயது நபர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்த தனது மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டார்.  தனது மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி அதனால் ஏற்பட்ட சண்டையில் காய் நறுக்கும் கத்தியை எடுத்து மனைவியை குத்தியதன் மூலம் இந்த கொலை நிகழ்ந்துள்ளது. இதே போன்று, ராசிபுரத்தில் தண்ணீர் குடிப்பதில், இன்ஜினியரிங் பயிலும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் சென்று முடிந்தது.   இது போன்று வாய்த் தகராறுகள் காரணமாக உணர்ச்சி வசப்பட்டு ஏற்படும் கொலைகளை  முன்கூட்டியே யூகித்து காவல் துறையினரால் தடுப்பது என்பது இயலாத காரியம்.  

இது தவிர, பணம் கொடுக்கல் வாங்கல், தனிப்பட்ட முன் விரோதம், அரசியல் விரோதம் போன்ற காரணங்களினாலும் கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அந்த நேரத்தில் எழும் ஆத்திர உணர்வின் காரணமாக நிகழ்த்தப்படுவதால் காவல் துறையினரால் இவற்றை தடுப்பது என்பது இயலாததாகும். 

கூலிப் படையினரால் நிகழ்த்தப்படும் கொலை சம்பவங்கள் காவல் துறையினரால் கட்டுப்படுத்த இயலும். 2011 ஆம் ஆண்டு கூலிப் படையினரால் நிகழ்த்தப்பட்ட கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை 6 என இருந்தது. இந்த எண்ணிக்கை 

2012 ஆம் ஆண்டு 3 என குறைந்துள்ளது என்பதை உறுப்பினர்களுக்கு சுட்டிக்  காட்ட விரும்புகிறேன். 

இங்கே பேசிய மாமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றங்களின் எண்ணிக்கை பற்றி எடுத்துக் கூறினார்கள். ஒரு சில வகை குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும் குற்ற விகிதம் குறைந்துள்ளது என்பதை நான் இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். குற்ற விகிதம் என்பது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு எத்தனை குற்றங்கள் நடந்துள்ளன என்பது ஆகும். இதன் அடிப்படையில் பார்த்தால், 2010 ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தாக்கலான வழக்குகளின் குற்ற விகிதம் 277.08 ஆகும். இந்த குற்றவிகிதம் 2012 ஆம் ஆண்டு 239.57 ஆக குறைந்துள்ளது. அதாவது 37.51 விகிதம் அளவிற்கு குறைந்துள்ளது. குற்ற விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், கூட்டுக் கொள்ளை வழக்குகள், கொள்ளை வழக்குகள், கன்னக் களவு வழக்குகள், திருட்டு வழக்குகள் ஆகியவற்றின் எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. 

எனது முந்தைய ஆட்சியின் இறுதியில், 2005-ல் கூட்டுக் கொள்ளைகளின் எண்ணிக்கை 73 ஆக இருந்தது.  இது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் இறுதியில், 2010-ல் 85 ஆக உயர்ந்தது. கொள்ளைகள் 437-ல் இருந்து 1,817 ஆகவும், கன்னக் களவுகள் 3,738ல் இருந்து  4,715 ஆகவும் உயர்ந்தன. தி.மு.க. ஆட்சி நடைபெற்ற ஐந்தாண்டு காலத்தில், கூட்டுக் கொள்ளை வழக்குகள் 16.44 சதவீதமும், கொள்ளைகள் 315.8 சதவீதமும், கன்னக் களவு வழக்குகள் 26 சதவீதமும் அதிகரித்தன. அதாவது, கூட்டுக் கொள்ளைகள் சராசரியாக 3.3 சதவீதம் அதிகரித்தன. கொள்ளை வழக்குகள் சராசரியாக  63 சதவீதம் அதிகரித்தன. கன்னக் களவு வழக்குகள் ஆண்டொன்றுக்கு சராசரியாக 5.2 சதவீதம் அதிகரித்தன. 

2011 ஆம் ஆண்டு 101 கூட்டுக் கொள்ளை வழக்குகளும், 2,066 கொள்ளை வழக்குகளும், 4,848 கன்னக் களவு வழக்குகளும், 13,924 திருட்டு வழக்குகளும் தாக்கலாகியுள்ளன. 2011 ஆம் ஆண்டில் வழக்குகளின் எண்ணிக்கை சற்று கூடுதல் என்றாலும், முதல் 4ஙூ மாதங்கள் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 2011 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2012 ஆம் ஆண்டு கூட்டுக்கொள்ளை வழக்குகள் 97-ம், கொள்ளை வழக்குகள் 1,898-ம், கன்னக் களவு வழக்குகள் 4,457-ம், திருட்டு வழக்குகள் 11,996-ம் தாக்கலாகியுள்ளன. அதாவது குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு இதுவரையில், கூட்டுக் கொள்ளை வழக்குகள் 27-ம், கொள்ளை வழக்குகள் 551-ம், கன்னக் களவு வழக்குகள் 1,199-ம், திருட்டு வழக்குகள் 3,099-ம் தாக்கலாகியுள்ளன.

கூட்டுக் கொள்ளை வழக்குகள் 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2012 ஆம் ஆண்டு 3.96 சதவீதம் குறைந்துள்ளன. 

கொள்ளை வழக்குகளை 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2012 ஆம் ஆண்டு 8.13 சதவீதம் குறைந்துள்ளன. கன்னக் களவு வழக்குகளை 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2012 ஆம் ஆண்டு 8.07 சதவீதம் குறைந்துள்ளன. திருட்டு வழக்குகளைப் பொறுத்த வரையில், 2010 ஆம் ஆண்டு தி.மு.க  ஆட்சியில் 14,583  ஆக இருந்த வழக்குகளின் எண்ணிக்கை, 2011 ஆம் ஆண்டு 13,924 எனவும்,  2012 ஆம் ஆண்டு 11,996 ஆகவும்  குறைந்துள்ளது.  2010 ஆம் ஆண்டு தி.மு.க  ஆட்சியில்  தாக்கலான திருட்டு வழக்குகளோடு ஒப்பிடும் போது இது 17.73 சதவீதம் குறைவாகும்.  

2010 ஆம் ஆண்டு தி.மு.க  ஆட்சியில் சொத்து தொடர்பாக 21,353 வழக்குகள் தாக்கலாகி  உள்ளன. 2011 ஆம் ஆண்டு, இது 21,062 எனவும், 2012 ஆம் ஆண்டு 18,585 என்றும் குறைந்துள்ளது. காவல் துறையினர் எடுத்து வரும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளினால், சொத்து சம்பந்தமான குற்றங்கள் 12.96 சதவீதம் குறைந்துள்ளன.  

தற்போது குற்றங்கள் அதிகரித்துள்ளன என்ற ஒரு உண்மைக்கு மாறான அவதூறு ஒரு சில எதிர்கட்சிகளால் பரப்பப்படுவதால்,  இத்தனை  புள்ளி விவரங்களை நான் இங்கே எடுத்துக் கூறியுள்ளேன். இதைத் தான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடி,  உண்மையின் மிகப் பெரிய பகைவன் என்பது பெரும்பாலும் வேண்டுமென்றே, செயற்கையான மற்றும் நேர்மையற்ற முறையில் சொல்லப்படும் பொய் அல்ல; மாறாக, தொடர்ந்து, நம்பச் செய்யும் வகையில் சொல்லப்படும் உண்மைக்கு புறம்பான கற்பனை ஆகும் என்றார். 

காவல் துறையினர் முனைப்புடன் செயல்படுவதால் தான், குற்றங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன. திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து நடவடிக்கைகள் எடுப்பதில் காவல்துறையினர் புதிய சவால்களை சந்தித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் இளைஞர்கள்  தனியார் நிறுவனங்களில் குறைந்த வருவாயில் பணிபுரிந்து வருவோர், தங்கள் ஆடம்பர செலவிற்காக வழிப்பறி சம்பவங்களில் ஈபடுவதும் நடைபெறுகிறது. இவர்கள் புதிய குற்றவாளிகளாக இருப்பதால், இவர்களை கண்டறிந்து கைது செய்வது காவல் துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்து விடுகிறது.  

உதாரணமாக, சென்னை, கவரப்பேட்டையில் பொறியியல் பட்டம் பெற்று தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்த நபர் மற்றும் பட்டயப் படிப்பு முடித்து வேலையில்லாமல் இருந்த அவரது நண்பர் ஆகியோர் திருமங்கலம், முகப்பேர், அம்பத்தூர், கொரட்டூர், ரெட்டேரி ஆகிய பகுதிகளில் சுமார் 20 சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதே போன்று, திருச்சியில் கல்லூரி ஒன்றில் படிக்கும் மூன்று மாணவர்கள் ஒரு கொள்ளை வழக்கிலும், பெரம்பலூரில் கல்லூரியில் பயிலும் இரு மாணவர்கள் கொலை மற்றும் கொள்ளை வழக்கிலும், வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் மூன்று மாணவர்கள் சங்கிலி பறிப்பு வழக்குகளிலும், திருப்பூரில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சங்கிலி பறிப்பு வழக்கு ஒன்றிலும் சம்பந்தப்பட்டுள்ளனர். 

கொலைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், அறிமுகம் இல்லாத புதிய நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், வீட்டு வேலைக்கு புதிய நபர்களை நியமிக்கும் போது அவர்களின் பின்னணியை நன்கு விசாரிக்க வேண்டும் என்றும், வீட்டில் தனியாக இருப்பவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தர வேண்டும் என்றும் பொதுமக்களிடையே காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  

மேலும், குற்றங்கள் நடக்காமல் தடுக்க விழிப்புணர்வு குழுவினர், காவல் நண்பர்கள் குழுவினர், ஊர்க்காவல் படையினர் ஆகியோரைக் கொண்டு ரோந்துகள் எண்ணிக்கை அதிகப்படுத்துதல்; பொதுமக்களிடையே குற்றங்கள் நடக்கும் முறை குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்கு உண்டான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்; மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்கள் மற்றும் வியாபர ஸ்தலங்கள், பணியிடங்கள் போன்றவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல்; வழக்கமான குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தல்; சொத்து சம்பந்தமான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, களவு போன பொருட்களை மீட்டு குற்றவாளிகளை தடுப்பு காவலில் வைத்தல் போன்ற குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில்  காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

குழந்தைகளை கடத்தினால் குண்டர் சட்டம்: 

நாட்டின் செல்வங்களான குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் திருட்டு மற்றும் காணாமல் போவது பற்றிய தகவல்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்கிறது. இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் இருக்க, குழந்தை கடத்தலில் ்டுபடுபவர்களை தடுப்புக் காவல் சட்டமான குண்டர் சட்டத்தின் கீழ், அதாவது 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 14-ன் கீழ் காவலில் வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

குழந்தைகள் நல காப்பகங்கள்: மகளிர் காவலர்கள் தமது தலைமையிடத்தை விட்டு வேறு இடங்களுக்கு பணி நிமித்தமாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அவர்களின் குழந்தகைகளை சரிவர பராமரிக்க இயலாமல் போய் விடுகிறது. இந்தக் குறையைப் போக்க, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காவல் படை தலைமையிடங்களிலும் குழந்தைகள் நல காப்பகங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்