நில பேரம்: வதேரா குற்றமற்றவர் - விசாரணை குழு

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

சண்டிகர்,ஏப். 24 ​ - அரியானா நில பேர ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா குற்றமற்றவர் என்று அம்மாநில விசாரணை குழு சான்று அளித்துள்ளது.  குர்கான் மாவட்டம் சிகோபூர் கிராமத்தில் உள்ள 3 ஏக்கர் நிலம் தொடர்பாக ராபர்ட் வதேராவின் நிறுவனமும், டி.எல்.எப். கட்டுமான நிறுவனமும் ரூ. 58 கோடியில் ஒப்பந்த பரிமாற்றம் செய்து கொண்டன. இதன்படி வதேரா வசம் உள்ள நிலம் டி.எல்.எப். நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இப்பிரச்சினையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன எனக் கூறி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா அம்மாநில பரிமாற்ற ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். 

இதையடுத்து அவர் வேறு பணியிடத்துக்கு மாற்றப்பட்டார். நில பேரம் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணமோகன் தலைமையில் மூவர் குழுவை அரியானா மாநில அரசு நியமித்தது. அக்குழு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. தற்போது நில பேர ஊழலில் வதேராவுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் குற்றமற்றவர் எனக் கூறியுள்ளது. இது தொடர்பாக குழு தலைவர் கிருஷ்ணமோகன் கூறியதாவது, 

நில பேர ஒப்பந்தத்தை ரத்து செய்ததின் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகார கெம்கா தனது அதிகார எல்லையை மீறி செயல்பட்டுள்ளார். எங்கள் அறிக்கையை தலைமை செயலாளரிடம் சமர்ப்பித்து விட்டோம் என கூறினார். நில பேரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்கா மேற்கொண்ட நிலைப்பாட்டுக்கும், மூவர் குழு கொண்ட நிலைப்பாட்டுக்கும் வேறுபாடுகள் உள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2012 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் பணியிட மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக ராபர்ட் வதேரா நிறுவன நில பேரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி கெம்கா உத்தரவிட்டார். பின்னர் நில பேர ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார். இதற்கிடையே அரியானா அரசால் நியமிக்கப்பட்ட மூவர் குழு நில பேரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என விசாரணை குழு கருத்து தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: