பெங்களூர் வெடிப்பு: நெல்லையைச் சேர்ந்த 2 பேர் சிக்கினர்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

நெல்லை,ஏப்.24 - பெங்களூர் பா.ஜ.க. அலுவலகத்தில் குண்டு வெடிப்பு தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த 2 பேரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பெங்களூர் மல்லேஸ்வரம் பா.ஜ.க. அலுவலகம் அருகே கடந்த 17ந் தேதி நடந்த பைக் குண்டு வெடிப்பில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். விசாரணையில் குண்டு வெடிப்புக்கு தீவிரவாதிகள் பயன்படுத்திய பைக், சென்னையில் விற்கப்பட்டது என தெரியவந்தது. இதையடுத்து தமிழக, கர்நாடக போலீசார் தனிப்படை அமைத்து தீவிரவாதிகளை தேடி வந்தனர். முதற்கட்டமாக பைக்கை வாங்கிய பெருங்குளத்தூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் விசாரணை நடந்தது. அவர் அதனை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மெக்கானிக் முருகன் என்பவரிடம் விற்றுள்ளார். முருகனிடம் போலீசார் விசாரித்தபோது அதனை வேறொரு மெக்கானிக் அன்வர்பாட்ஷாவிடம் விற்றது தெரியவந்தது. அவரிடம் தீவிரவாதிகள் போலி ஆவணங்கள் மற்றும் போலி முகவரி கொடுத்து பைக்கை வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் பைக்கில் சில பாகங்களை மாற்றி பைப் வெடிகுண்டை பொருத்தி நாசவேலைக்கு பயன்படுத்தி உள்ளனர். குண்டு வெடிப்பு பின்னணியில் கேரள தீவிரவாதிகள் ்ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க எஸ்.பி.அருளரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கேரளாவில் பதுங்கியிருந்த 4 பேரை தனிப்படையினர் பிடித்தனர். பைப் வெடிகுண்டை தயாரித்தது அவர்கள் தான் என தெரிகிறது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நெல்லை ஆமீன்புரத்தைச் சேர்ந்த பீர்முகம்மது, பஷீர் மற்றும் ரசூல்மைதீன், சலீம் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பெங்களுருக்கு தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். அவர்களில் 2 பேர் சென்னையில் பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கின்றனர். இது தவிர கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடைய கிச்சான் புகாரி, முகம்மதுஷாலி ஆகியோரை நேற்று முன்தினம் கர்நாடக போலீசார் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். பின்னர் தனிப்படை போலீசார் இருவரையும் பெங்களூருக்கு கொண்டு சென்றனர். பிடிபட்டவர்களின் பின்னணியில் தீவிரவாத அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

குண்டு வெடிப்பில் தொடர்பில்லை: கிச்சான்புகாரி தாய் பேட்டி

 

பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிச்சான்புகாரியின் வீடு மேலப்பாளையம் கொட்டிபாளையம் வடக்கு தைக்கா தெருவில் உள்ளது. அவரது தாய் தெளலத் அங்கு குடியிருந்து வருகிறார். மகன் கைது செய்யப்பட்டது குறித்து அவர் கூறுகையில், எனது மகன் கடந்த 2 ஆண்டுகளாக எந்த பிரச்சனையிலும் ்டுபடவில்லை. தற்போது கோவையில் தங்கி அவரது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறான். 2 வாரத்திற்கு ஒரு முறை என்னை பார்க்க வருவான். நேற்று முன்தினம் கிச்சான்புகாரி நெல்லைக்கு என்னை பார்க்க வந்த போது நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து என்னிடம் யாரும் தகவல் சொல்லவில்லை. போலீசார் அவன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். எனவே உடனடியாக அவனை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: