நிலக்கரி சுரங்கஊழல் விவகாரம்: பிரதமரை ஆதரித்து பேசிய சோனியாவுக்கு பா.ஜ.க கண்டனம்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 25 - நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் பிரதமரை ஆதரித்து பேசும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பாரதீய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவை துணை தலைவர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் கோரியது குறித்து சோனியாவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அதை அவர்கள் கேட்கட்டும் என்று அவர் பதில் அளித்ததாக தெரிகிறது. இதுபோல் அவர் கூறியிருந்தால் அவரது அதிகார மமதை பாணியிலான கருத்துக்கு நான் கருத்து கூற விரும்பவில்லை. அதே சமயம் சோனியாவிடம் ஒரு விஷயத்தில் பதிலை எதிர்பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் நிவாஸ் மிர்தா தலைமையிலான நாடாளுமன்ற கூட்டு குழுவின் அறிக்கை பல ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் புகழப்படும் நிலையில் அதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாக்கோ தலைமையிலான குழுவின் அறிக்கை சந்தேகத்துக்கு உரியதாக இருப்பது ஏன்? நிலக்கரி ஊழல் தொடர்பான அறிக்கையில் சட்ட அமைச்சர் இலக்கண பிழைகளை மட்டுமே திருத்தினார் என்று அரசு கூறுவது வியப்பளிக்கிறது. அரசு சி.பி.ஐ. விவகாரங்களில் தலையிடுகிறது என்பதற்கு இதுவே முதல் ஆதாரமாகும். சி.பி.ஐ. தயாரித்த அசல் அறிக்கை என்ன என்பதையும் அதில் சட்ட அமைச்சர் மேற்கொண்ட திருத்தங்கள் என்ன என்பதையும் தெரிவிக்குமாறு பா.ஜ.க கோருகிறது. இதை இந்த நாடு தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். இதனிடையே பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான அருண்ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறுகையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமரின் பங்கை சோனியா நல்லவிதமாக பார்க்கலாம். ஆனால் அவரது பங்கை ஊழல் என்றே பா.ஜ.க. கருதுகிறது. பிரதமர் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் விடுத்த கோரிக்கை குறித்து சோனியா அளித்த பதில் எங்களுக்கு வியப்பளிக்கவில்லை. மத்திய சட்டத்துறை அமைச்சர், சி.பி.ஐ. இயக்குனரையும் சட்ட அதிகாரிகளையும் அழைத்து நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான அறிக்கையில் திருத்தம் செய்யுமாறு கூற வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: