முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பச்சைபட்டு உடுத்தி தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரைவைகை ஆற்றில் இறங்கினார்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,ஏப்.- 26 - அழகர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகர் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் நேற்று மதுரை வைகை ஆற்றில் இறங்கினார். அழகர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்லக்கில் சுந்தர்ராஜபெருமாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 23 ம்தேதி மாலை கள்ளழகர் வேடம் பூண்டு, கண்டாங்கி சேலை அணிந்து, கையில் வேல்கம்புடன் மலையில் இருந்து அழகர் மதுரைக்கு புறப்பட்டார். வழி நெடுக திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளிய அழகரை நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று மாவடியில் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பிறகு அழகர் பல்வேறு மண்டபகப்படிகளில் எழுந்தருளி நேற்றுமுன்தினம் மாலை 5.30 மணிக்கு அவுட்போஸ்ட் வந்தடைந்தார். அங்கும் பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்று தரிசித்தனர். இதன் பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்களின் மத்தியில் நீந்தியபடி வந்த அழகர் இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலை அடைந்தார். இங்கு விடிய,விடிய அழகருக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தல்லாகுளம் மற்றும் கோரிப்பாளையம் பகுதியில் விடிய,விடிய பக்தர்கள் திரண்டு இருந்தனர். அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக கடந்த 20ம்தேதி வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த22ம் தேதி மதுரையை வந்து அடைந்தது. அழகர் இறங்குவதற்காக கோரிப்பாளையம் ஆழ்வார்புரம் பகுதியில் வைகை ஆற்றுக்குள் மண்டகப்படிகள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு தல்லாகுளம் பிரசன்னபெருமாள் கோவிலில் அழகருக்கு திருமஞ்சணம் சாத்தப்பட்டு அழகர் பெருமான், பிரசித்தி பெற்ற தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அழகர் தன் சுந்தர தோளில் ஏற்றுக்கொண்டு ஆயிரம் பொன் சப்பரத்திற்கு எழுந்தருளினார். இதன் பிறகு அழகர் அதிகாலை 2.30 மணி அளவில் கருப்பணசாமி கோவிலுக்கு வந்தடைந்தார். பின்னர் இங்கிருந்து புறப்ப்பட்ட அழகர் பல்வேறு மண்டபகப்படிகளில் எழுந்தருளி நேற்று காலை 7.35 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது வைகை ஆற்றுக்குள்ளும், வைகை கரையோரமும் திரண்டு இருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. வைகை ஆற்றுக்குள் மாநகராட்சி மண்டகப்படி மற்றும், அறநிலையத்துறை மண்டபகப்படியில் எழுந்தருளிய அழகர் மீண்டும் வைகை ஆற்றுக்குள் இருந்து புறப்பட்டு பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளி பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படிக்கு வந்தடைந்தார். அங்கு கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இங்கிருந்து மதியத்திற்கு மேல் புறப்பட்ட அழகர் இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலை அடைந்தார். அங்கு விடிய,விடிய அழகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று காலை சேஷவாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபகப்படிக்கு அழகர் வருகிறார். இங்கு மதியம் 2.30 மணியளவில் கருட வாகனத்தில் எழுந்தருளும் அழகர் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்து விட்டு பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிவிட்டு மீண்டும் இரவு 10 மணியளவில் ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார். இங்கு விடிய,விடிய அழகரின் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த நாள் காலை மோகினி அவதாரத்தில் தோன்றி அங்கிருந்து புறப்பட்டு இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தை அடைகிறார். 28ம்தேதி அதிகாலை 2.30 மணிக்கு அழகர் பூப்பல்லக்கில் புறப்பட்டு மலையை நோக்கி செல்கிறார்.
அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மதுரையில் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதிலிருந்து போலீசார் கேமரா மூலம் கூட்டத்தை கண்காணித்தனர்.
----------------
டிசி பாக்ஸ்
--------
பச்சை பட்டின் மகிமை தான் என்ன?
வைகை ஆற்றுக்குள் இறங்கும் அழகர் என்ன பட்டு உடுத்தி இறங்குகிறார் என தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பார்கள். நேற்று ஆற்றில் இறங்கிய அழகர் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார். இது நாட்டில் விவசாயத்தையும், செழுமையையும் அதிகரிக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்தனர்.
இதற்கு ஏற்றார்போல் நேற்று அழகர் மதுரை நகருக்குள் நுழைந்ததுமே கடந்த 3 மாதத்திற்கு மேல் மழையையே பார்க்காத மதுரையில் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.
----
வைகையில் தண்ணீரை பார்த்த
பக்தர்கள் கண்களில் ஆனந்த கண்ணீர்
மதுரையில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் எங்கும் வறட்சியாக இருந்தது. கடந்த தைமாதம் நடந்த மீனாட்சி அம்மன் கோவில் தெப்பதிருவிழாவின் போது கூட மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலை தெப்பம் நடந்தது. இதே போல் வைகை ஆற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
ஆனால் மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தீவிர நடவடிக்கை எடுத்து வைகை அணையில் இருந்து தண்ணீரை திறக்கசெய்து அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு தண்ணீர் வந்தது. இதனால் அழகரை தரிசிக்க வந்த பக்தர்கள் வைகையில் தண்ணீரை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் விட்டு முதல்வர் ஜெயலலிதாவிற்கும், மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்தனர்.
---
சைவத்தையும்- வைணவத்தையம்
இணைத்த மன்னர் திருமலைநாயக்கர்
அழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வரும் அழகர், அவர் வருவதற்குள் திருக்கல்யாணம் முடிந்து விடுவதால் கோபித்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கி வண்டியூர் செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் மீனாட்சி திருக்கல்யாணத்திற்கும், அழகர் மதுரை வருவதற்கும் சம்பந்தமே கிடையாது. அதாவது மீனாட்சி திருக்கல்யாணம் மாசிமாதம் நடந்து வந்தது. அழகர் சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றுக்குள் இறங்குவது சித்திரை மாதம்.
மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் வைணவ பக்தர்களையும், சைவ பக்தர்களையும் ஒன்றாக இணைக்கும் பொருட்டு இரு திருவிழாவையும் இணைத்து நடத்தியதாக கூறப்படுகிறது.
--

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்