முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் குற்றங்களுக்கு நடவடிக்கை தேவை - தி.மு.க. தீர்மானம்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.28 - இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. உயர்நிலை செயல் திட்டகுழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று (ஏப்.27) தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் கட்சித்தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனிமொழி பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது உட்பட பல்வேறு பிரச்சினைகளை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் இலங்கை போர் குற்றம் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான விசாரணைக்குழு இலங்கைப்படையினர் ஈழத்தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. அரசை எதிர்க்கின்றவர்கள் கடத்திச்செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்த குழுவின் அறிக்கை ஏப்.25-ம் தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டுள்ளது. போர் கைதிகளை இலங்கை ராணுவம் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளது என்றும் வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது.

இலங்கைப் போர் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வ தேச விசாரணை ஆணையத்தை அமைத்து இந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபடவேண்டும் என்றும் இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இது தொடர்பாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தோழமைக் கட்சியினருடன் கலந்து பேசி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்