முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.27 - கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை அமைச்சர் முஹம்மத் ஜான்  தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பிறகு அமைச்சர் முஹம்மத் ஜான் அறிவிப்பு விவரம் வருமாறு:-

பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த மக்களின் நலனுக்காக மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர், அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே தங்களின் உயர் வகுப்புகளை தொடரும் பொருட்டு 2 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப்பள்ளிகளாகவும், 5 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும், ஆக மொத்தம் 7 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை நிலை உயர்த்துவதற்காக 1 கோடியே ரூ.69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள பிரமலைக் கள்ளர் வகுப்பை சார்ந்தவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயல்பட்டு வரும் 289 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை ஆய்வு செய்யும் பொருட்டு, கள்ளர் சீரமைப்பு கல்வி அலுவலருக்கு ஓட்டுனர் பணியிடத்துடன் கூடிய வாகனம் ஒன்றினை வழங்கிட ரூ.9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படும் 1294 விடுதிகளில் மாணவியரின் நலனுக்காக 476 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பிரமலைக் கள்ளர் நலனுக்காக மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் 289 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுள் 77 பள்ளிகள் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளாகும். இந்த 476 விடுதிகள் மற்றும் 77 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவியரின் நலனை பேணிக் காக்கவும், அவர்களின் சுகாதார நலனை பாதுகாக்கவும், ரூ.1கோடியே 39 லட்சம் செலவில் தலா ஒரு சுகாதார குட்டைதகளி வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை போர்வைகள் வழங்கிடப்படும். இதன்படி 2013 -14 -ம் ஆண்டில் 1294 விடுதிகளில் தங்கிப் பயிலும் 80,064 மாணவ மாணவியரின் பயன்பாட்டிற்காக போர்வைகள் வழங்க நடப்பாண்டிற்கு ரூ.1 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியரின் பயன்பாட்டிற்காக ஆண்டிற்கு ஒருமுறை ஒவ்வொரு ஆண்டும், தொடர்ந்து பாய்கள் வழங்கப்படும். இதன் படி நடப்பாண்டில் 1294 விடுதிகளில் தங்கிப் பயிலும் 80,064 மாணவ மாணவியரின் பயன்பாட்டிற்காக 46 லட்சம் செலவில் பாய்கள் வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியருக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவுகளுக்கான கட்டணத்தை பள்ளி விடுதி மாணவ, மாணவியருக்கு ரூ.2 லிருந்து ரூ.20 ஆகவும் மற்றும் கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்கு ரூ.3 லிருந்து ரூ.40 ஆகவும் உயர்த்தி வழங்கிட ரூ.85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப்பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தற்போது மாதந்தோறும் வழங்கப்படும் உண்டி, உறையுள் கட்டணத்தை தொழிற்கல்வி படிப்புகளுக்கு ரூ.75 முதல் ரூ.140 என்பதை ரூ.350 ஆகவும், ஐடிஐ / பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு ரூ.75 முதல் ரூ.90 என்பதை ரூ.225 ஆகவும், 11, 12  ம் வகுப்பு மற்றும் இளங்கலை படிப்புகளுக்கு ரூ.75 முதல் ரூ.80 என்பதை ரூ.175 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

இதன்படி 44,961 மாணவ மாணவியருக்கு உயர்த்தப்பட்ட விகிதத்தில் உண்டி, உறையுள் கட்டணங்களை வழங்குவதற்கு இந்நிதியாண்டில் ரூ.9 கோடியே 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

பிரமலைக் கள்ளர்களின் நலனுக்காக மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இயங்கி வரும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கற்றல் மற்றும் தனித்திறன்களை மேம்படுத்தும் பொருட்டு பள்ளி ஒன்றுக்கு ரூ.20.000 வீதம் 52 கள்ளர் சீரமைப்பு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் செலவில் நூலகப் புத்தகங்கள் வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக செயல்பட்டு வரும் 1294 விடுதிகளில் தங்கிப் பயிலும் 80,064 மாணவ மாணவியரின் பொது அறிவுத்திறனை மேம்படுத்தவும் மற்றும் நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஏதுவாகவும் கல்லூரி விடுதி ஒன்றுக்கு ரூ.25,000 வீதமும், பள்ளி விடுதி ஒன்றுக்கு ரூ.5000 வீதமும் அனைத்து விடுதிகளுக்கும் நூலகப் புத்தகங்கள் வழங்க ரூ.1 கோடியே 2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இயங்கி வரும் 27 கள்ளர் சீரமைப்பு மேல்நிலைப்பள்ளிகளில், ஆய்வுக் கூட வசதிகள் இல்லாத 3 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.90 லட்சம் செலவில் ஆய்வுக் கூட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியரின் பாதுகாப்பு நலனைக் கருத்திற் கொண்டு 300 விடுதிகளுக்கு ரூ.18 லட்சம் செலவில் பல்நோக்கு தீ அணைப்பான் கருவிகள் வழங்கப்படும்.

உருது மொழி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் உருது மொழியை முதல் அல்லது இரண்டாவது மொழியாக கொண்டு பயின்று மாநில அளவில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 10 -ம் வகுப்பிற்கு தற்போது வழங்கப்படும் பரிசுத் தொகையான ரூ.2000, ரூ.1500 மற்றும் ரூ.1000 என்பதை முறையே ரூ.10,000, ரூ.5000 மற்றும் ரூ.3000 ஆகவும், இதேபோன்று 12 -ம் வகுப்பிற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகையான ரூ.3000, ரூ.2000 மற்றும் ரூ.1000 என்பதை முறையே ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இதற்கென நடப்பாண்டிற்கு ரூ.75 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கீடு செய்து மொத்தம் 96 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

மாநில ஹஜ்குழுவிற்கான நிர்வாக மானியம் 2013 -14 ம் ஆண்டு முதல் ரூ.20 இலட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் முஹ்ம்மத்ஜான் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago