குஜராத் கலவரம்: மோடி மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

அகமதாபாத், ஏப். 27 - கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எவரையும் கொலை செய்யுமாறு உத்தரவிடவில்லை என்று குஜராத் கலவர வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

குஜராத் படுகொலை தொடர்பாக விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தது. இதை எதிர்த்து குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா, மோடி உட்பட 58 பேருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், குஜராத் படுகொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அப்பாலான ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணையின் போது சிறப்பு புலனாய்வுக் குழுவின் வழக்கறிஞர் ஜமுவார் வாதிடுகையில், 

குஜராத் முதல்வர் உள்ளிட்டோர் மக்களைக் கொலை செய்யுமாறு கூறியதாக ஜாகியா, அவருக்கு உதவியாக இருக்கக் கூடிய சமூக ஆர்வலர் டீஸ்டா உள்ளிட்டோர் பொய்யான ஒரு புகாரை தாக்கல் செய்திருக்கின்றனர். குஜராத் முதல்வர் ஒருபோதும் அப்படி சொன்னதே இல்லை. இவர்கள் சொல்வது போல கலவரத்தில் ்ஈடுபடுவோர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று குஜராத் முதல்வர் கூறியதற்கு எந்த ஒரு ஆதாரமுமே தாக்கல் செய்யப்படவில்லை . இந்த புனைவுக்கு டீஸ்டாதான் முழு பொறுப்பாளர்தான்.

டீஸ்டாவின் அறிவுறுத்தலின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பாயம் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2002 ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதியன்று மோடி தமது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் உறுப்பினர் மல்கோத்ரா, தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களை விசாரிக்கும் போது அமைச்சர் ஹரேன் பாண்டியா, மோடி அப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தார் என்று கூறியதாகத் தெரிவித்தனர். ஆனால் அதற்கு உரிய ஆதாரம் இல்லை. எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்கள் சமர்ப்பிக்கவும் இல்லை என்றார்.

மேலும் இது தொடர்பாக மறைந்த அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் 2002 பிப்ரவர் 27 ம் தேதி செல்போன் அழைப்புகள், மோடியின் வாக்குமூலம் உள்ளிட்ட பல ஆவணங்களையும் அவர் தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: