சட்ட அமைச்சர் பதவி விலக மாட்டார்: மத்திய அரசு

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 27 - நான் எந்த தவறும் செய்யவில்லை என்று மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் கூறியுள்ளார். அதே நேரம் அவர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசும் அவருக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறது. இந்த விஷயத்தில் சட்ட அமைச்சருக்கு மத்திய அரசின் ஆதரவு பரிபூரணமாக கிடைத்துள்ளது. 

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக நேற்று சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் இந்த ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை மத்திய சட்ட அமைச்சரிடம் அவரது விருப்பப்படி பகிர்ந்து கொண்டதாக தெரிவித்து இருந்தார். மேலும் இந்த அறிக்கையை பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டதாகவும் அவர் ஒப்புக் கொண்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அஸ்வினி குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆனால் அவர் பதவி விலக மாட்டார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சட்ட அமைச்சரும் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். 

முன்னதாக இந்த பிரச்சினை தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், நான் எந்த தவறும் செய்யவில்லை. உண்மை வெளிவரும் என்று கூறியுள்ளார். முன்னதாக அவர் பிரதமரை சந்தித்து இந்த பிரச்சினை தொடர்பான தனது விளக்கத்தையும் அளித்தார். பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத்தையும் அவர் தனியாக சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், மத்திய சட்ட அமைச்சர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும், அவர் பதவி விலக மாட்டார் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. இயக்குனர் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் குறித்து கேட்ட போது அதைப் பற்றி கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் கமல்நாத். அஸ்வினி குமார் எந்த தவறும் செய்யவில்லை. தற்போது அவரிடம் காட்டப்பட்டது வரைவு அறிக்கைதானே தவிர, இறுதி அறிக்கை அல்ல என்றும் கமல்நாத் வக்காலத்து வாங்கி பேசினார். சட்ட அமைச்சரை சி.பி.ஐ. இயக்குனர் சந்தித்த போது பிரதமர் அலுவலக அதிகாரிகளும், நிலக்கரி அமைச்சக அதிகாரிகளும் அங்கு ஏன் இருந்தனர் என்று நிருபர்கள் மற்றொரு கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த கமல்நாத், பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரி துறையை தன்பால் சிலகாலம் வைத்திருந்தார். அதன் காரணமாகவே அவரது அலுவலக அதிகாரிகளிடமும், நிலக்கரி அமைச்சக அதிகாரிகளிடமும் அறிக்கையின் விபரங்கள் பற்றி தெரிவிக்கப்பட்டன என்று கமல்நாத் பதிலளித்தார். மத்திய சட்ட அமைச்சர் தற்போது சட்ட நுணுக்கங்கள் பற்றி ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: