சிகரெட்டுக்கு 10 சதவீத கூடுதல் வரி: மம்தா அதிரடி

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஏப். 27 - மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கி எடுத்திருக்கும் ரூ. 30 ஆயிரம் கோடி சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி ஏழை மக்களின் அவசர தேவைகளுக்காக ரூ. 500 கோடி திரட்டும் வகையில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான வரியை அதிரடியாக 10 சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பிரபலமான சாரதா குரூப் சிட்பண்ட் நிறுவனத்தில் நடந்துள்ள ரூ. 30 ஆயிரம் கோடி மோசடி தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாக தலைவர் சுதிப்தோ சென், இயக்குனர்களில் ஒருவரான தேப்ஜனி முகர்ஜி, மற்றொரு அதிகாரி அரவிந்த்சிங் சவுகான் ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மூன்று பேரும் கந்தர்பாலில் உள்ள தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கொல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. 

இதனிடையே சிட்பண்ட் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், பிரச்சினைக்குரிய சிட்பண்ட் நிறுவனத்தின் தலைவர் சுதிப்தோ சென் சி.பி.ஐ. க்கு எழுதியுள்ள கடிதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இருவர் தம்மை மிரட்டியது குறித்து தெரிவித்திருக்கிறார். இதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதன் மூலம், இந்த மோசடியில் உண்மை வெளிவரும் என்றார். இதனிடையே பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்காக ரூ. 500 கோடி நிதி உதவியை அறிவித்திருக்கிறார் முதல்வர் மமதா பானர்ஜி. இது தொடர்பாக அவர் கூறுகையில், 

சாரதா குழுமத்திடம் பணத்தை இழந்தோருக்கு நிவாரண உதவி வழங்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு கமிஷன் அமைத்து உண்மையில் மிகவும் ஏழையாக இருப்பவர்கள், அன்றாட தேவைகளுக்காக போராடுகிறவர்கள், வீடுகளில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த காத்திருப்போர் பட்டியல் தயாரித்து அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். ஆனால் நிதியை எங்கிருந்து பெற முடியும்? அதனால்தான் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீது கூடுதலாக 10 வரி விதித்து அதன் மூலமாக தொகையை நிவாரண உதவியாக வழங்க முடிவு செய்திருக்கிறோம் என்றார். மேலும் சிட்பண்ட் நிறுவனத்தின் சொத்துகளை ஏலம் விட்டு அதன் மூலம் நிதி திரட்டவும் திட்டமிட்டிருக்கிறோம். மாநில அரசு இதற்கு பொறுப்பேற்கிறது என்றார் மம்தா பானர்ஜி.

இதை ஷேர் செய்திடுங்கள்: