2ஜி - நிலக்கரி ஊழல்: பிரதமர் ராஜினாமா செய்யக்கோரி அமளி

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஏப். 27 - 2 ஜி, நிலக்கரி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று அமளி ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. 

பட்ஜெட் கூட்டத் தொடரின் 2 வது அமர்வு கடந்த வாரம் தொடங்கியது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் போன்ற முறைகேடு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இதே போல மற்ற எதிர்க்கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி வருகின்றன. 

இதனால் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அமளி ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மறைவால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சிகள் நிலக்கரி மற்றும் ஸ்பெக்ட்ரம் தொடர்பான பிரச்சினைகளை கிளப்பினார்கள். பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். 

உ.பி. மந்திரி அசம்கான் அமெரிக்காவில் அவமரியாதை செய்யப்பட்டது தொடர்பாக சமாஜ்வாடி எம்.பி.க்கள் பிரச்சினையை கிளப்பினார்கள். இதனால் அவையில் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து சபை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதே போல் மேல்சபையும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: