முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதி நிலவச்செய்வார் முதல்வர்: தலைவர்கள்

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.30 - தமிழகத்தில் ஜாதி, மத மோதலற்ற போக்கை உருவாக்கி மாநிலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அமைதி நிலவச்செய்வார் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். மரக்காணம் பகுதியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி தவறு செய்தவர்களுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும் முதல்வர் வழங்குவார் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

தமிழக சட்டசபையில் நேற்று  கேள்வி நேரம் முடிந்ததும், இம்மாதம் 25ம் தேதி மாமல்லபுரத்தில் பாமகவினர் நடத்திய சித்திரை முழுநிலவு பெளர்ணமி விழாவையொட்டி அன்றைய தினம் மரக்காணம் பகுதியில் இரு சமூகத்தவரிடையே நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவம் குறித்த சிறப்பு கவனஈ்ர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில், சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். விவாத விவரம் வருமாறு:

 

பண்ருட்டி ராமச்சந்திரன் 

 

(எதிர்க் கட்சி துணைத் தலைவர்): மரக்காணத்தில் இரு வகுப்பினரிடையே நடைபெற்ற மோதல் கவலை தரக்கூடியதாகும். இந்த சம்பவத்தில் யார் குற்றம் இழைந்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம்முடைய முதலமைச்சரை பொறுத்தவரை அவர் ஜாதியை பார்க்கமாட்டார். நீதியைத்தான் பார்ப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. தவறு செய்தவர்கள் யார் எத்தகையவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற செயல்களை வளரவிடக்கூடாது. 1987ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அனைத்து ஜாதி தலைவர்களையும் அழைத்துப்பேசி சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியது போல நம்முடைய முதலமைச்சரும் அவர்களை அழைத்துப்பேசி உரிய முடிவு காண வேண்டும்.

 

க.பாலகிருஷ்ணன் (சிபிஎம்): 

 

மரக்காணம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தை காவல்துறை நிதானமாக கையாண்டது வரவேற்கத்தக்கது. அவர்கள் எடுத்த நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் உள்ளது. சித்திரை விழாவுக்கு வந்தவர்கள் ஒருசிலர் செய்த தவறின் காரணமாக இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.இதுபோன்ற மோதல்களை திட்டமிட்டு ஏற்படுத்தும் சக்திகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

குணசேகரன் (சிபிஐ): 

 

இந்தியாவிலேயே ஜாதிய முரண்பாடுகளை வேரறுத்த இடம் தமிழகம். தற்போது ஜாதியத்தை தலைதூக்கும் நடவடிக்கைகளில் சில சக்திகள் ்டுபடுகின்றன. அதை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த மோதலின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஜெ.குரு (பாமக): 

 

மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த பிரச்சனை தொடர்பாக சிஐடி விசாரணை, சிபிசிஐடி விசாரணை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட எந்த விசாரணைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த விசாரணையின் முடிவில் நாங்கள் தவறு செய்திருந்ததாக நிரூபிக்கப்பட்டால் எந்த தண்டனையையும் ஏற்க தயார். (மேலும், இந்த சம்பவம் குறித்து ஒரு சமுதாயத்தின் மீது ஜெ.குரு குற்றம் சுமத்தி பேசிய கருத்துக்கள் முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது இந்த விவாதத்தின் போது முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஜெ.குரு விவாதத்தில் ்டுபட்டார்.)

 

ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி): 

 

மரக்காணத்தில் நடைபெற்ற நிகழ்வு என்பது ஒரு சில தலைவர்கள் வரம்பும், பொறுப்புணர்வும் இல்லாமல் ஜாதி மற்றும் மதங்களை புண்படுத்தும் வகையிலும், உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும் பேசியது தான் அடிப்படை காரணம்.

தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் நிலவுகிறது. முதலமைச்சரை பொறுத்தவரை இந்த பிரச்சனையில் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்பார். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

 

டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): 

 

சித்திரை முழு நிலவு விழாவில் பேசியவர்கள் ஜாதி துவேசம் குறித்து பேசியததால் தான் மரக்காணத்தில் கலவரம் உண்டானது. இந்த சம்பவத்தில் பலர் வீடுகளை இழந்துள்ளனர். 3 பேர் இறந்துள்ளனர். பொதுச் சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த தவறுகளை இழைத்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து, தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

செ.கு.தமிழரசன் (குடியரசு கட்சி): 

 

தருமபுரி கலவரத்தின் சுவடு முடிவதற்குள்ளாகவே மரக்காணத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஜாதிய உணர்வுகளை அரசியலாக்கி ஆதாயம் தேடும் இப்படிப்பட்டவர்களின் செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.நிச்சயமாக இந்த பிரச்சனையை முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவார் என்று நம்புகிறேன்.  இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்