முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுகில் பாக். குத்திவிட்டது: சரப்ஜித்சிங் சகோதரி

வியாழக்கிழமை, 2 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.3 - பாகிஸ்தானில் எனது சகோதரர் சரப்ஜித்சிங்கை கொன்றதன் மூலம் இந்தியாவின் முதுகில் பாகிஸ்தான் குத்திவிட்டது என்று பாகிஸ்தான் மீது  சரப்ஜித்சிங்கின் சகோதரி தல்பீர் கவுர் குற்றம் சாட்டினார். மேலும் பாகிஸ்தான் சிறையிலுள்ள இந்தியர்களை மீட்க நான் போராடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 பாகிஸ்தான் சிறையில் சக கைதிதள் தாக்கியதில் காயமடைந்த  சரப்ஜித்சிங் லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் ஆவேசமான அவரது சகோதரி தல்பீர் கவுர்  நிருபர்களிடம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூறியதாவது:

சரப்ஜித்சிங்கை தவறான கண்ணோட்டத்தில் பிடித்து பாகிஸ்தான் சிறையில் அடைத்தது.  அவரை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வர இந்தியாவில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் முயற்சி செய்யவில்லை. இதில் எனது சதோதரர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பிரதமராக இருந்த வாஜ்பாய், தற்போது பிரதமராக உள்ள மன்மோகன்சிங் ஆகியோர் முதுகில் பாகிஸ்தான் குத்திவிட்டது. எனது சகோதரரைக் கொன்றதன் மூலம், இந்தியர்களின் உணர்ச்சியை பாகிஸ்தான் தூண்டிவிட்டுள்ளது. எனது சகோதரர் இந்தியாவின் தியாகி ஆகிவிட்டார்.                 

பாகிஸ்தானில் நடைபெற உள்ள தேர்தலில் வெற்றிபெறுவதற்காக எனது சகோதரரை பாகிஸ்தான் அதிபர் அஸிப் அலி சர்தாரி கொன்றுவிட்டார். பாகிஸ்தான் சிறையில் வாடும் மற்ற கைதிகளை மீட்க நான் போராடுவேன். கடந்த 2005-ம் ஆண்டு முதல் நான்   சரப்ஜித்சிங்கை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன்.

ஆனால் அடுத்து வந்த அரசுகள் சரப்ஜித்சிங்கை மீட்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது தொடர்பாக இந்திய அரசாங்கம் முயற்சி மேற்கொண்டிருந்தால் அவர் இப்போது  உயிருடன் இருந்திருப்பார். எனது முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது.

 எனது சகோதரரை  விடுதலை செய்ய மனித உரிமைக் கழகத்தைச் சேர்ந்த ஒருவர்  2 கோடி ரூபாய் கேட்டு பேரம் பேசினார். நான் 2கோடி ரூபாய் கொடுத்திருந்தால் எனது சகோதரரை மீட்டிருக்கலாம். அவரும் உயிருடன் இருந்திருப்பார். அந்த நபர் என்னிடம் 2 கோடி ரூபாய் தருமாறு கேட்டபோது, நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். என்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்றேன். உங்களால் 25 கோடி ரூபாய் கொடுக்க  முடியாவிட்டால்  2 கோடி ரூபாயாவது கொடுங்கள் என்றும்அவர் கேட்டார். நீங்கள் காலையில் 2 கோடி ரூபாய் தந்தால் மாலையில் உங்கள் தம்பி விடுதலையாகிவிடுவார் என்றும் அந்த நபர் என்னிடம் கூறினார். ஆனால் விதி விளையாடிவிட்டது.

 இந்நிலையில்  உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் என்றும்,சரப்ஜித்சிங் கெளரவிக்கப்படுவார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே என்னிடம் உறுதியளித்தார் என்றும் தல்பீர் கவுர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் சிறையில் செங்கல், தட்டுகளால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் சரப்ஜித்சிங் லாகூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பார்ப்பதற்கு அவரது சகோதரிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் பார்த்துவிட்டு வந்த மறுநாள்                         

 சரப்ஜித்சிங் இறந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்