சரப்ஜித் சிங் உடல் இந்தியா வந்தது: இன்று அடக்கம்

வியாழக்கிழமை, 2 மே 2013      இந்தியா
Image Unavailable

லாகூர், மே. 3 - பாகிஸ்தான் சிறைச்சாலையில் கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங், லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலை இந்திய தூதரகத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்படைத்தது. அதனையொட்டி சரப்ஜித் சிங் உடல் நேற்று  சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டது. அவரது சொந்த ஊரில் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. .

கடந்த 1990 ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நகரில் குண்டுவெடித்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். அந்த சமயத்தில் சரப்ஜித் சிங் தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் போய்விட்டார். அவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். லாகூரில்  நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில்  தொடர்புடையதாக கூறி  சரப்ஜித் சிங்கிற்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சக கைதிகள் சிலர் கடந்த 26 ம் தேதி கொடூரமாக தாக்கினர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர், லாகூர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து சரப்ஜித்சிங்கின் சகோதரி, மனைவி மற்றும் 2 மகள்கள், லாகூர் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சந்தித்தனர். சரப்ஜித், நேற்று முன்தினம் மீள முடியாத கோமா நிலைக்குச் சென்று விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்க இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம், இந்தியத் தூதர் வலியுறுத்தியதாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை ஒரு மணியளவில், சரப்ஜித் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவக் குழுவின் தலைவர் செளகத் தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், சரப்ஜித் உயிரிழந்த தகவலை ஜின்னா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சரப்ஜித்சிங்கை சந்தித்து விட்டு நேற்று முன்தினம்தான் அவரது குடும்பத்தினர் இந்தியா திரும்பினர். இந்த நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் அவர்களை தாக்கியது. கடந்த 6 நாட்களாக கோமா நிலையில் உயிருக்குப் போராடிய சரப்ஜித் சிங் உயிரிழந்தது, அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சரப்ஜித்சிங்கின் உடலை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதனை ஏற்று சரப்ஜித் சிங் உடலை இஸ்லாமாபாத்தில் உள்ள  இந்திய தூதகரகத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதனையடுத்து இஸ்லாமாபாத்தில் இருந்து ஒரு சிறப்பு விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்திற்கு கொண்டுவரப்பட்டது. சரப்ஜித் உடலுக்கு  அவரது குடும்பத்தினர் செய்ய வேண்டிய சடங்குகளை செய்துகொண்டியிருக்கின்றனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் உவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனையடுத்து சரப்ஜித் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. சரப்ஜித் மரணத்தையொட்டி பஞ்சாப் மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரப்ஜித் சிங் மறைவிற்கு பாராளுமன்றத்திலும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: