3-வது முறையாக ராஜ்யசபா எம்.பி.யாகிறார் மன்மோகன்

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 4 - அசாம் மாநிலத்திலிருந்து 3 வது முறையாக ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். பிரதமர் மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது பதவியில் உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் ஜூன் 14 ம் தேதியுடன் முடிவடைகிறது. மன்மோகன்சிங்குடன் அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான குமார் தீபக் தாசின் பதவிக்காலமும் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு காலியாகும் 2 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 30 ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 13 ம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 21 ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு கடைசி நாள் 23 ம் தேதி ஆகும். தேர்தலில் போட்டி இருந்தால் 30 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு 79 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். கூட்டணிக் கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் மொத்தம் 94 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. இதனால் 2 ராஜ்யசபா எம்.பி.க்கள் தேர்வாவது உறுதியாகி இருக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங்கை மீண்டும் எம்.பி.யாக தேர்வு செய்வதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை.. ஆனால் குமார் தீபக் தாஸை மீண்டும் எம்.பி. யாக்க கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த ஒரு இடத்துக்காக பல தரப்பினர் டெல்லியை முகாமிட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தற்போதே அரை டஜனுக்கும் மேற்பட்டோர் டெல்லியில் தங்களுக்கு தெரிந்த பிரமுகர்கள் மூலம் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: