முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. பொதுகணக்குக்குழு அறிக்கை: நிராகரித்த தி.மு.க.-காங்கிரஸ்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.29 - ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி பாராளுமன்ற பொதுகணக்குக்குழு விசாரணை வரைவு அறிக்கையை காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளை சேர்ந்த 11 உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டனர். மேலும் முரளி மனோகர் ஜோஷிக்கு எதிராக புதிய தலைவரை தேர்ந்தெடுத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

தி.மு.க. வை சேர்ந்த ஆ.ராசா மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றையை ஏலம் விட்டதில் ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொதுகணக்குக்குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையில் ஆ.ராசா மட்டுமல்லாது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில் வரைவு அறிக்கையை தாக்கல் செய்வதற்காக நேற்று பாராளுமன்ற பொதுக்கணக்குக்குழுவை அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூட்டினார். கூட்டத்தில் குழுவில் உள்ள 21 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அப்போது ஆ.ராசா, சிதம்பரம், பிரதமர், பிரதமர் அலுவலகம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் உள்பட 11 கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயத்தில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள், அ.தி.மு.க. உறுப்பினர்கள்,ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 9 உறுப்பினர்கள் வரைவு அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது. உடனே முரளி மனோகர் ஜோஷி மற்றும் அ.தி.மு.க., பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 9 உறுப்பினர்களும் கூட்டத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் வெளியேறியதும் பாராளுமன்ற பொதுகணக்குக்குழு தலைவராக சைபுதீன் ஜோஸ் என்பவரை தேர்ந்தெடுத்தனர். அதன் பின்னர் வரைவு அறிக்கை மீது ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது வரைவு அறிக்கையை காங்கிரஸ் 7, தி.மு.க. 2, சமாஜ்வாடி 1, பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா 1 உறுப்பினர்களும் சேர்ந்து நிராகரித்துவிட்டனர். இந்த சம்பவம் ஒருவேளை இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே இல்லாததாக இருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்