ரூ.200கோடி பரிவர்த்தனையில் கனிமொழிக்குத் தொடர்பில்லை- கலைஞர் டி.வி. ராஜேந்திரன் சாட்சியம்!

சனிக்கிழமை, 4 மே 2013      இந்தியா
Image Unavailable

டெல்லி: மே, - 5 - ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சினியூக் பிலிம்ஸ் நிறுவனத்துக்கும் கலைஞர் டி.வி.க்கும் இடையே நடைபெற்ற ரூ. 200 கோடி பணப் பரிவர்த்தனையில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சிபிஐ நீதிமன்றத்தில் கலைஞர் டி.வி. பொது மேலாளர் ஜி. ராஜேந்திரன் சாட்சியம் அளித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கலைஞர் டி.வி. பொது மேலாளர் ஜி. ராஜேந்திரன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, கலைஞர் டி.வி முன்னாள் இயக்குநர் சரத் குமார் சார்பில் வழக்கறிஞர் சுஷீல் குமார், ஆசிடிப் பால்வா, ராஜீவ் அகர்வால் சார்பில் வழக்கறிஞர் விஜய் அகர்வால் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராஜேந்திரன் அளித்த பதில்: கனிமொழி ராஜினாமா 2007-ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி முதல் கலைஞர் டி.வி-இன் நிதிப் பிரிவு பொது மேலாளராக பணியாற்றி வருகிறேன். கலைஞர் டி.வி. இயக்குநர் பதவியில் இருந்து 2007-ஆம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி கனிமொழி ராஜினாமா செய்தார். அதன் பிறகு 2007 ஜூலை 30-ந் தேதி டி.வி. தொடங்க அனுமதி கேட்டு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையில் விண்ணப்பிக்கப்பட்டது. அதனால், மத்திய அரசின் அனுமதி பெறும் நடவடிக்கையில் கனிமொழி கவனம் செலுத்தினார் என்று சிபிஐ கூறுவதில் உண்மையில்லை. சினியூக் பணம் கொடுத்தது ஏன்? கலைஞர் டி.விக்கு சினியூக் டிபிலிம்ஸ் நிறுவனம் ரூ. 200 கோடி வழங்கியது. இந்தத் தொகை பல்வேறு வங்கிகளின் பரிவர்த்தனைகள் மூலம் 2008-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை கலைஞர் டி.வி-க்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகையைக் கொண்டு படங்களுக்கான செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமை, நிகழ்ச்சித் தயாரிப்புக்கான செலவு செய்யப்பட்டது. இந்த நிலையில், கலைஞர் டி.வி பங்குகளை வாங்க சினியூக் டிபிலிம்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டியது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இதனால், கொடுத்த பணத்தைத் திருப்பித் தரும்படி சினியூக் டிபிலிம்ஸ் நிறுவனம் நெருக்குதல் கொடுத்தது. அதனால், வாங்கிய பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க 2010-ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தயாளுக்கு உடல்நலக் குறைவு 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி நடைபெற்ற கலைஞர் டி.வி. இயக்குநர்கள் கூட்டத்தில் இயக்குநர் சரத் குமாரும் மற்றொரு இயக்குநருமான தயாளு அம்மாளும் இடம்பெற்றிருந்தனர். கலைஞர் டி.வி நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60மூ பங்குகளும் சரத் குமாருக்கு 20மூ பங்குகளும் இருந்தன. 2007-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாளு அம்மாளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், நிதியைக் கையாளும் அதிகாரம் நீங்கலாக மற்ற நிர்வாகப் பொறுப்புகளை சரத் குமாரிடம் தயாளு அம்மாள் ஒப்படைத்தார். அந்த வகையில், சினியூக் டிபிலிம்ஸ் நிறுவனம் ரூ. 200 கோடி வழங்கிய விவரத்தை அவர் அறிந்திருந்தார். தயாளு அம்மாளுக்கு ஆங்கிலம் தெரியாது; சரத் குமாருக்கு தமிழ் தெரியாது. அதனால் தயாளு அம்மாளுவிடம் நானும் அமிர்தமும் அலுவல் ரீதியாகப் பேசுவோம். அமைச்சகங்களிடம் இருந்து அனுமதி பெறும் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பை வழக்கறிஞர் எழில்மலை என்பவரிடம் வழங்கியிருந்தோம். எங்கள் நிறுவனத்துக்கு சினியூக் டிபிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய பணம் எங்கிருந்து அந்த நிறுவனத்துக்குக் கிடைத்தது என்பதை அறிய வேண்டிய அவசியம் எனக்கு எழவில்லை. அந்த நிறுவனத்துக்கும் கலைஞர் டி.விக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் உண்மையானவை, போலியானவையல்ல என்றார். இந்த வழக்கில் ராஜேந்திரனை விசாரிக்க, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராசா, சித்தார்த் பெஹுரா, ஆர்.கே. சந்தோலியா, ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, சஞ்சய் சந்திரா, கெளதம் தோஷி, சுரேந்திர பிப்பாரா, கரீம் மொரானி, ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகியவற்றின் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி சைனி வாய்ப்பளித்தார். ஆனால், விசாரிக்க ஏதும் இல்லை என்று அவர்கள் கூறியதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: