முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைத் தமிழர் பிரச்சினை - மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.29 - இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு தண்டை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐ.நா. சபை அமைத்த மூவர் குழு இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை,  இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளின் மீது தொடுத்த இறுதிக்கட்ட ஆயுத தாக்குதலில் (2008 செப்டம்பர் முதல் 2009 மே வரை) வன்னி பகுதியில்  சுமார் 3,30,000 அப்பாவி தமிழ் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். மேலும் எண்ணற்றோர் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர். பெரும் எண்ணிக்கையில் அப்பாவித் தமிழர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்,  லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் யுத்தத்திற்குப் பிறகு ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டனர் என தெரிவிக்கிறது.

ஆயுத மோதலின்போது  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கச் சென்ற குழுவினர் மீதும், மருத்துவமனைகள் மீதும், ஐ.நா.சபை அலுவலகங்கள் மீதும். ஆயுத மோதலில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், நிவாரணம் வழங்கிடவும் சென்ற செஞ்சிலுவைச் சங்கத்தினர் மீதும் இலங்கை ராணுவம் தாக்குதல் தொடுத்துள்ளது.  தாக்குதலுக்கு ஆளாகி பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய தமிழ் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், நிவாரணம் வழங்கவும் இலங்கை ராணுவம் அனுமதிக்காத காரணத்தாலேயே உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

ஆயுத மோதலின்போது விடுதலைப்புலிகள் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தியது, சிறுவர்களை கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்தது உள்ளிட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை ஐ.நா.குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டி இருப்பினும், இலங்கை ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்கள் காரணமாகவே உரிமைக்காக போராடிய தமிழர்களும், அப்பாவி தமிழ் மக்களும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர். இது  அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகும். இத்தகைய கொடிய மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்திட வேண்டும். மனித உரிமைகளை மீறி, பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் மீது மனித உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதனை செயல்படுத்தும் வகையில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட, மத்திய அரசு தனது ராஜ்ய உறவை பயன்படுத்தி, இலங்கை  அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும், ஆயுத மோதல்கள் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும், ராணுவ முகாம்களில்  அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் இன்னும் முழுமையான புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை. சம உரிமை, மொழி, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளிலும் முழுமையான அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி வழங்கிடவும், nullண்டகாலமாக தீர்க்கப்படாத இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் இலங்கை அரசு இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

எனவே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியாக நிரந்தரத் தீர்வு காண, இலங்கையில் உள்ள  அனைத்து தமிழர்கள் அமைப்புகளோடும் பேச்சுவார்த்தை நடத்திடவும்,  இலங்கை அரசை நிர்ப்பந்திக்க  இந்திய அரசு தனது ராஜ்ய உறவை வலுவாக பயன்படுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்