முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா - எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் பராமரிப்புப் பணி

செவ்வாய்க்கிழமை, 7 மே 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.8 - அண்ணா- எம்.ஜி.ஆர். நினைவிடங்கள் தனியார் மூலம் பராமரிக்கப்படும் என்றும், பார்வையாளர்களுக்கு குடிநீர் வசதி போன்றவை வழங்கப்படும் என்றும் செய்தித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

செய்தித்துறை மானியக்கோரிக்கை மீது அவர் பதிலளித்து பேசியதாவது:-

தனியார் பராமரிப்பில் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்கள் பராமரித்தல்:

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பைக் கருத்தில் கொண்டு, தோட்டப்பணி, தூய்மைப்பணி மற்றும் இதர பணிகள் தனியார் நிறுவனம் மூலம் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 

குடிநீர் வசதி:

பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். 

பாதுகாப்புப் பணி:

பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை மூலம் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்படும். 

ராஜாஜி மண்டபம்:

வரலாற்று சிறப்புமிக்க சென்னை ராஜாஜி மண்டபம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்படும்.  

வைக்கம் பெரியார் நினைவகம்:

கேரள மாநிலம் வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் பார்வையாளர்கள் பயன்பெறும் வகையில் பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா ஆகியன ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்படும்.  

நவீன வெப் ஆப்செட்:

தமிழரசு அச்சகத்தில் வண்ணப் பிரதிகளை ஒரே நேரத்தில் அச்சிடவும், அச்சுத் தரத்தை உயர்த்தவும், சந்தாதாரர்களுக்கு விரைவாக இதழ்களை வழங்குவதற்கும், நான்கு வண்ண வெப் ஆப்செட் இயந்திரம் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.  

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்