அரசு மணல் வாரியம் அமைக்க ஜெயலலிதாவுக்கு கோரிக்கை

Jaya3 10

 

சென்னை, ஏப்.29 - அரசு மணல் வாரியம் அமைக்க லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்துள்ளது.இதுகுறித்து  ஜெயலலிதாவுக்கு  கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கடிதம் எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

தங்களது ஆட்சியில்தான் மணலை அரசே வழங்கும் என அறிவித்து புரட்சிகரமான திட்டத்தை செயல்படுத்தினீர்கள். மணல் லாரி தொழிலை சார்ந்தவர்கள் மற்றும் பொது மக்களாகிய ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்களில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஆனால் மணல் அள்ளிப்போடும் ஒப்பந்த உரிமையை பெற்ற சில நபர்கள் அரசு மணல் குவாரியில் மணல் வழங்குவதில் பல முறைகேடுகள் செய்வதால், மக்களுக்கான நல்ல திட்டத்தை கொண்டு வந்தும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. மணல் வாரியம் அமைத்தால் மூன்றாவது நபர்கள் தலையிடுவதை தடுத்து மக்களுக்கு மணலை குறைந்த விலையில் வழங்க வாய்ப்புள்ளது.

மணலை சுத்தம் செய்து தருவதாக கூறி நீதிமன்றத்தில் தவறான தகவலை கொடுத்து 2-ம் தர விற்பனை என்ற பெயரில் பன்மடங்கு மணல் விலையை உயர்த்தி முறைகேடாக விற்பனை செய்து வந்தார்கள். ஒரு சிலர் மணல் குவாரிகளில் அரசு அதிகாரிகளை உடந்தையாக வைத்துக் கொண்டு ஆற்றிலேயே இரண்டாம் நிலை விற்பனை ரசீதுகளை வழங்கி பல முறைகேடுகள் செய்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தினர். இவர்களிடம் மணல் ஜலிக்கும் இயந்திரம் ஏதுமில்லை. மேலும் இவர்கள் இயந்திரம் மூலம் அரசு நிர்ணயித்த ஆழத்தைவிட அதிக அளவு மணலை அள்ளி, தனது  700 லாரிகள் மூலம் பல இடங்களில் மலை போல குவித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போதைய அரசு 2006-ம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிதம் என உயர்த்தி கணக்கிட்டு மணல் விற்பனை மூலம் அரசுக்கு தற்போது ஆண்டுக்கு ரூ.120 கோடி வருமானம் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி மூன்றாம் நபர்களின் தலையீடு இல்லாமல் அரசே வாரியம் அமைத்து நேரடியாக மணலை வழங்கினால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000 கோடி வருமானம் நிச்சயமம் கிடைக்கும். இந்த நபர்களால் அரசுக்கு வருமான இழப்பு தான்  ஏற்படுகிறது.

அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும், மேற்கண்ட குறைபாடுகளை நீக்கும் வகையில் தாங்கள் மணல் வாரியம் அமைப்பதாக தங்களது தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்து, அமைய உள்ள தங்களது பொற்கால ஆட்சியில் விடியல் பிறக்கும் என மணல் லாரி தொழிலை நம்பியுள்ள பல லட்சணக்கான வாக்காளர்களாக உள்ள வாக்காளர்கள் தயாராக உள்ளோம். எங்களுக்கு நல்வழி காட்டுவீர்கள் என மனதார நம்புகிறோம். தாங்கல் மணல் வாரியம் அமைக்க வேண்டுமென மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் அதை சார்ந்த பல லட்சணக்கான குடும்பங்கள் சார்பாக மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ