முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல் - பார்லி. பொதுகணக்கு குழு கடும் கண்டனம்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.28 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஆ.ராசாவுக்கு பாராளுமன்ற பொதுகணக்குக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக தி.மு.க. வை சேர்ந்த ராஜா, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை முறைகேடான வகையில் ஏலம் விட்டு ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளார். சிறு சிறு தகவல் தொடர்பு கம்பெனிகள் மற்றும் வெறும் பெயரளவில் உள்ள நிறுவனங்களுக்கை அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் ரூ. 3 ஆயிரம் கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பணத்தை பினாமி பெயரில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் தனது மனைவி பெயரில் துபாய் உள்பட அரபு நாடுகளில் உள்ள வங்கிகளிலும் இதர தொழிலதிபர்கள் மூலமாகவும் முதலீடு செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குறித்து சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. அதில் ஆ.ராசா, மத்திய தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹூரா, ராசாவின் தனி செயலாளராக இருந்த சந்தோலியா, ஸ்வான் கம்பெனி புரமோட்டர் பல்வா, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களும் பல கம்பெனிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மற்றொரு பக்கம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாரதிய ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொதுகணக்குக்குழுவும் பாராளுமன்ற கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தி வருகின்றன. ஆக ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மும்முனை விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்திய பாராளுமன்ற பொதுகணக்குக்குழு வரைவு அறிக்கையை மிகப்பெரிய அளவில் தயாரித்துள்ளது. அந்த அறிக்கையின் நகல் குழுவில் உள்ள உறுப்பினர்களின் ஆய்வுக்கு விடப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் கண்டனத்திற்கு குழுவில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கலாம். பொதுகணக்குக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதத்திற்கு வைக்கப்படுகிறது. இந்த அறிக்கையில் ஆ.ராசா மீது கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், ப.சிதம்பரத்திற்கும் அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் மத்திய கேபினட் செயலாளருக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடுவதில் சரியான நடவடிக்கையை பிரதமர் அலுவலகம் எடுக்கவில்லை என்பதோடு பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த விஷயத்தை ஓரம் கட்டியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு விவகாரத்தை எழுப்பி,சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் அப்படியே முடித்துவிடும்படி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சிபாரிசு செய்ததாக கூறப்படும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதும் குழு கடுமையாக தாக்கியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டதில் பிரதமர் அலுவலகம் தலையிடாமல் ஒதுங்கிக்கொண்டது. இதனால் ஸ்பெக்ட்ரத்தை ஆ.ராசா தன்னிச்சையாகவும், நியாயமற்ற முறையிலும் விதிமுறைகளை மாற்றி முறைகேடான வகையில் ஏலம் விடுவதற்கு பெரும் உதவியாகப்போய்விட்டது. ஸ்பெக்ட்ரம் ஏலம் விடுவதில் தலையிடாமல் ஒதுங்கி இருக்கும்படி கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி தன்னுடைய அலுவலகத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் ஸ்பெக்ட்ரம் ஏலம் விஷயத்தில் பிரதமர் அலுவலகம் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்துள்ளது. முறைகேட்டை தடுக்க எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முயற்சிக்கவில்லை.  இது ராசாவுக்கு கொடுக்கப்பட்ட மறைமுக அனுமதியாகும். இதை பயன்படுத்தி ராசா தனது இஷ்டம்போல் கமிஷனும் லஞ்சமும் வாங்கிக்கொண்டு ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டுள்ளார் என்றும் அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை ராசா விட்டுள்ளார். மேலும் தொலைதொடர்புத்துறை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆ.ராசாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தை ராசா புறக்கணித்தது பெரும் கவலையை அளிக்கிறது. 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடுவதுபற்றி பரிசீலனைதான் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஏலம் விடுவதற்கு தொலைதொடர்பு கமிஷனும் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் சிபாரிசு செய்யவில்லை என்ற பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியும் அதை ராசா கேட்காமல் பிரதமருக்கு தவறான வழியை காட்டியுள்ளார். மேலும் உண்மையில் பாதியை கூறியும் பாதியை மறைத்தும் ராசா கூறியுள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து சட்ட அமைச்சகமானது அதிகாரம் உள்ள அமைச்சர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று கூறவில்லை என்று குழுவுக்கு பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பது நம்பகத்தனமாக இல்லை. சட்ட அமைச்சகம் கூறிய ஆலோசனைகள் பிரதமர் அலுவலகத்திற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் தகவல்தொடர்பு அமைச்சர் அதை மீறி செயல்பட்டதால் அதிகாரம் உள்ள கேபினட் அமைச்சர்கள் குழுவை பிரதமர் அலுவலகத்தால் அமைக்க முடியவில்லை என்று அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை குறித்து ஆய்வு செய்ய பொதுக்கணக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்