முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா நாளை பதவியேற்பு

சனிக்கிழமை, 11 மே 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், மே. 12 ​- கர்நாடக சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தராமையா நாளை(திங்கள்கிழமை) மாநிலத்தின் 28 வது முதல்வராகப் பதவியேற்கிறார். கடந்த 5 ம் தேதி அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 121 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து காங்கிரசில் யார் முதல்வர் என்ற போட்டி நிலவியது. இதற்காக காங்கிரஸ் மேலிடக் குழு நேற்று பெங்களூரில் தீவிர ஆலோசனை நடத்தியது. பின்னர் எம்.எல்.ஏ.க்களிடையே ரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதில், பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாகவும், சிலர் மல்லிகார்ஜுன கார்கேயின் பெயரையும், வேறு சிலர் கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் ரகசிய வாக்கெடுப்பில் குறிப்பிட்டிருந்தனர். 

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவராக சித்தராமையா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்திரி இருவரும் நேற்று முன்தினம் மாலை கவர்னர் பரத்வாஜை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் ஆட்சி அமைக்க உரிமை கோருவதாகவும் கூறி கடிதம் கொடுத்தனர். பின்னர் சித்தராமையாவும் இரவு 7.30 மணிக்கு கவர்னரை சந்தித்து காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவராக தாம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். 

இதைத் தொடர்ந்து அவரை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதன் பின்னர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில முதல்வராக 13 ம் தேதி பதவியேற்க இருப்பதாகத் தெரிவித்தார். பொதுவாக முதல்வரின் பதவியேற்பு விழா சட்டசபை மற்றும் தலைமைச்செயலகம் செயல்படும் விதான்செளதா கட்டிடத்தின் முன்பு நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் முதல்வர் பதவியேற்பு விழாவை கண்டீரவா விளையாட்டுத் திடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் 28 வது புதிய முதல்வராக சித்தராமையா திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு பதவியேற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. முதலில் அவர் மட்டும் பதவியேற்பார் என்றும் அடுத்தக்கட்டமாக அமைச்சர்கள் பதவிஏற்பார்கள் என்றும் கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்