முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்சால் நீக்கம் ஏன்? பிண்ணனி தகவல்கள்!

சனிக்கிழமை, 11 மே 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மே. 12  - ரயில்வேயில் மகேஷ்குமார் என்ற அதிகாரிக்கு உயர் பதவி பெற்றுத் தர, மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் சகோதரி மகன் விஜய் சிங்லா ரூ. 10 கோடி பேரம் பேசி ரூ. 90 லட்சத்தை முதல் தவணையாக பெற்ற போது கையும், களவுமாக சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிக்கினார். அவருடன் மேலும் சிலரும் கைதானார்கள். இதனால் பன்சால் பதவி விலக வேண்டும் என்று கோரி பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கின. ஆனால், விஜய் சிங்லாவுடன் தனக்கு தொழில் ரீதியிலான தொடர்பு எதுவும் கிடையாது என்று பன்சால் திட்டவட்டமாக மறுத்து வந்தார்.

ஆனால் பேரம் பேசப்பட்ட லஞ்சப் பணம் ரூ. 10 கோடியில் முன்தொகையாக ரூ. 90 லட்சம் தர உடன்பாடு ஏற்பட்டதாக மகேஷ் குமார் அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணையில், மகேஷ் குமாரின் நண்பரான, ரயில்வே ஐ.ஜி. க்கு தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. க்கு தகவல் கிடைத்துள்ளது.

அவர்தான் சிங்லாவிடம் வழங்குவதற்காக மகேஷ் குமார் வைத்திருந்த தொகை அடங்கிய பெட்டியைப் பெற்று வர ஆய்வாளரை அனுப்பியதாகத் தெரிகிறது. அதில் ஏராளமான பணம், ஆவணங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆய்வாளர், அவரது நண்பர் மூலம் சி.பி.ஐ. க்கு ரகசியத் தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில்தான் அந்த இருவரையும் அடுத்தடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பவன் குமார் பன்சாலின் அமைச்சக ஊழியர்கள், அதிகாரிகள், தனிச் செயலர் உள்ளிட்டோரிடம் கடந்த இரண்டு நாள்களாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் கோணங்கள் அனைத்தும் கடைசியாக பன்சாலை நோக்கியே சென்றதால் அவரிடம் நேரில் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் சி.பி.ஐ. க்கு ஏற்பட்டதாம். இது குறித்து சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவிடம் விசாரணைக் குழு தெரிவித்தனர். இதையடுத்து, பிரதமரின் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்தே டெல்லியில் பன்சால் தமது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. 

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான பன்சால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் ரெயில்வே அமைச்சராகப் பதவி ஏற்றார். ஊழல் சர்ச்சையில் சிக்கி 7 மாதங்களிலேயே அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. ரூ. 10 கோடி லஞ்ச பேரம் தொடர்பாக அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்