முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக முதல்வராக சித்தராமையை பதவி ஏற்றார்

திங்கட்கிழமை, 13 மே 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,மே.14 - கர்நாடக மாநிலத்தின் 28-வது முதல்வராக சித்தராமையா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். மிக விமர்சையாக நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிவடைந்த பின்னர் கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றைத் தவிர மீதமுள்ள 223 -தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தேர்தலுக்கு முன்பே இறந்துவிட்டதால் அவர் போட்டியிட்ட தொகுதியில் மட்டும் வரும் 25-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு நடைபெற்ற 223 தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. 121 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பாரதிய ஜனதா, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தலா 40 தொகுதிகளில் வெற்றிபெற்றது. எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா 6 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது. மீதித்தொகுதிகளில் சுயேட்சைகள் வெற்றிபெற்றுள்ளனர். 

அதிக தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனையடுத்து தம்மை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கவர்னர் பரத்வாஜை சந்தித்து கேட்டுக்கொண்டார். அதனையடுத்து 13-ம் தேதி ஆட்சி அமைக்குமாறு சித்தராமையாவுக்கு கவர்னர் பரத்வாஜ் அழைப்புவிடுத்தார். அதன்படி சித்தராமையா நேற்று முறைப்படி மாநிலத்தின் 28-வது முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். முதல்வர் சித்தராமையாவுக்கு கவர்னர் பரத்வாஜ் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் வைத்தார். பெங்களூரின் மையப்பகுதியில் உள்ள கடல் மாதிரி பரந்துள்ள கனீதராவா ஸ்டேடியத்தில் பதவி ஏற்பு விழா நடந்தது. பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. பதவி ஏற்புவிழாவில் முதல்வர் சித்தராமையாவின் குடும்பத்தினர்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பலத்த மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையும் கைதட்டல்களுடன் கிராமிய நடனங்களுடன் இசைவாத்தியும் வாசிக்க 64 வயது சித்தராமையா முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். வழக்கமாக பெங்களூர் நகரம் குளிர்ந்த நகரமாக இருக்கும். நேற்று சற்றுக்கூடுதலாக குளிரும் மேகக்கூட்டமும் அதிகமாக இருந்தது. நேற்று சரியாக காலை 11.40 மணிக்கு கவர்னர் பரத்வாஜ் கன்னட மொழியில் பதவி பிரமாணத்தை வாசிக்க முதல்வர் சித்தராமையா உண்மையின் பேரிலும் அரசியல் சட்டத்தின்பேரிலும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். அப்போது மைதானத்தில் கூடியிருந்தவர்கள் விண்ணை பிளக்கும் வகையில் பலத்த கோஷமிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

பதவி ஏற்பு விழாவில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மல்லிகார்ஜூன் கார்கே, எம்.வீரப்பமொய்லி, கே.முனியப்பா, ரகுமான் கான் மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிரித்விராஜ் சவாண், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் பல தலைவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்