முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவி ஏற்பு விழாவுக்கு மன்மோகன் சிங்கை அழைப்பேன்

திங்கட்கிழமை, 13 மே 2013      உலகம்
Image Unavailable

 

லாகூர்,மே.14 -  என் பதவி ஏற்பு விழாவிற்கு வரும்படி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுவேன் என்று பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் வரலாற்று சிறப்பு மிக்க பொதுத்தேர்தலில் அந்த நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது. அதனையொட்டி கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் மீண்டும் பதவி ஏற்க உள்ளார். தேர்தலில் தம் கட்சி வெற்றிபெற்றவுடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஷெரீப், இந்தியாவுடன் மீண்டும் நல்லுறவை விரும்புகிறேன். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றார். இதை இந்தியா வரவேற்றுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியதோடு, இந்தியாவுக்கு வருமாறு ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்தார். 

இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு வருமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஷெரீப் அழைப்பு விடுத்திருப்பதோடு தமது பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுவேன் என்று ஷெரீப் கூறியுள்ளதாக எக்ஸ்பிரஸ் நீயூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னணியில் இருக்கிறது என்ற செய்தியை கேட்டதும் பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள ஷெரீப்புடன் சேர்ந்து செயல்பட தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். மேலும் ஷெரீப்புக்கு மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே புதிய நல்லுறவு அத்தியாயம் தொடங்குவதற்கு உங்களுடனும் உங்கள் அரசுடனும் சேர்ந்து பணியாற்ற தயார் என்று கூறியிருந்தார். மேலும் நம் இருவருக்கும் வசதியான நேரம் இருக்கும்போது இந்தியாவுக்கு வரும்படி அழைக்கிறேன் என்றும் மன்மோகன் சிங் அந்த கடிதத்தில் மேலும் கூறியிருந்தார். 

இந்தியாவுடன் எப்போதும் நல்லுறவு வைத்துக்கொள்வதையே ஷெரீப் விரும்புகிறார். இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது இருநாடுகளிடையே நல்லுறவு ஏற்படுவதற்கு வாஜ்பாயுடன் அமைதி பேச்சுவார்த்தையை ஷெரீப் நடத்தினார். பேச்சுவார்த்தை நடந்துகொண்டியிருக்கும்போது ராணுவ புரட்சி மூலம் ஷெரீப்பை பதவியில் இருந்து முஷாரப் நீக்கியதோடு பாகிஸ்தானை விட்டே வெளியேற்றினார். பின்னர் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு திரும்பிய ஷெரீப், தற்போது தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்