முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப்பிரதேசத்தில் போலீசாருடன் மோதல் பா.ஜ.க. வினர் படுகாயம்

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ, ஏப்.- 30 - உத்தரப்பிரதேசத்தில் போலீசாருக்கும் பா.ஜ.க.தொண்டர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது தொடர்பாக  சி.பி.ஐ. ஏற்கனவே விசாரணையை நடத்தி வருகிறது. இந்த வழக்கில்  தி.மு.க.வைச்  சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த ஊழல் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொதுக் கணக்கு குழுவும் விசாரணை நடத்தியது. இந்த குழு தனது விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் தாக்கல் செய்தபோது அக்குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் இந்த அறிக்கையை நிராகரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று லக்னோவில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விதான் பவன் வீதியில் உள்ள தங்களது அலுவலகத்தில் இருந்து பா.ஜ.க. வினர் மாநில தலைவர்  சூரியபிரதாப் சஹி தலைமையில் ஊர்வலமாக செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.க. தொண்டர்களுக்கும் இடையே  தள்ளு முள்ளு ஏற்பட்டு பிறகு அது மோதலாக உருவெடுத்தது. அப்போது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதை அடுத்து போலீசார் பா.ஜ.க. தொண்டர்களை தாக்க ஆரம்பித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஏராளமான பா.ஜ.க.வினர் படுகாயம் அடைந்தனர். பா.ஜ.க. தொண்டர்கள்மீது போலீசார் தேவையில்லாமல் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் இதில் ஏராளமான தொண்டர்கள் காயம் அடைந்துள்ளனர் என்றும் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் கூறினார். படுகாயம் அடைந்த தொண்டர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசாரின்  தாக்குதலை கண்டித்து பிறகு பா.ஜ.க.வினர் விதான்பவன் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்