மனைவியின் நினைவாக தாஜ்மகால் கட்டிய போஸ்ட் மாஸ்டர்

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, மே. 18  - உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் தனது மனைவியின் நினைவில் தாஜ்மகாலைப் போன்றே ஒரு குட்டி தாஜ்மகாலை கட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் புலாந்ஷாஹரைச் சேர்ந்தவர் பைசுல் ஹஸன் காதிரி(77). ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர். அவரின் மனைவி தஜமுல்லி பேகம் கடந்த 2011 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து காதிரி தனது மனைவியின் நினைவாக ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலைப் போன்றே ஒரு கட்டிடத்தை கட்டினார். 

புலாந்த்ஷாஹர் மாவட்டத்தில் 5,000 சதுர அடியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த குட்டி தாஜ்மகாலில் தஜமுல்லி பேகத்தின் நினைவிடம் உள்ளது. தாஜ்மகாலைப் போன்று பெரிதாக இல்லாவிட்டாலும் காதிரி கட்டியுள்ள குட்டி தாஜ்மகால் அழகாக உள்ளது. இது குறித்து காதிரி கூறுகையில், 

ஷாஜகானின் தாஜ்மகாலைப் பார்த்த போது அவர் காதலுக்காக இப்படி ஒன்றை கட்டி சாதாரண மனிதர்களை அவமதித்துவிட்டார் என்று நினைத்தேன். ஆனால் எனது மனைவியின் மறைவிற்குப் பிறகு தான் தாஜ்மகால் பணம் சம்பந்தப்பட்டது அல்ல காதலின் ஆழம் சம்பந்தப்பட்டது என்பதை புரிந்து கொண்டேன். எங்களுக்கு குழந்தை இல்லாததால் இருந்த பணத்தை வைத்து எங்களுக்கு சொந்தமான இடத்தில் குட்டி தாஜ்மகால் கட்டினேன். என் வீட்டில் இருந்து பார்த்தால் நான் கட்டிய தாஜ்மகால் தெரியும் என்றார். ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ளது இந்த குட்டி தாஜ்மகால்.

இதை ஷேர் செய்திடுங்கள்: