கர்நாடகத்தில் நடிகர் அம்பரீஷ் - 28 மந்திரிகள் பதவியேற்றனர்

சனிக்கிழமை, 18 மே 2013      சினிமா
Image Unavailable

 

பெங்களூர், மே. 19  - கர்நாடக மாநிலத்தில் நடிகர் அம்பரீஷ், நடிகை உமாஸ்ரீ உட்பட 28 பேர் புதிய அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதில் 20 பேர் கேபினட் அமைச்சர்கள். 8 பேர் இணை அமைச்சர்களாவர். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாநில முதல்வராக சித்தராமையா கடந்த 13 ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர் காங்கிரஸ் மேலிடத்துடன் புதிய அமைச்சர்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி விட்டு பெங்களூர் திரும்பினார். இதனைத் தொடர்ந்து நேற்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.

கர்நாடக மாநிலத்தின் கேபினட் அமைச்சர்களாக தேஷ்பாண்டே, குவாமர் உல் இஸ்லாம், பிரகாஷ் ஹக்கேரி , ராமலிங்க ரெட்டி, டி.பி. ஜெயச்சந்திரா, ஹெச்.கே. பாட்டீல், ஷாமனூர் சிவசங்கரப்பா, சீனிவாச பிரசாத், மகாதேவப்பா, ஜார்ஜ், மகாதேவ பிரசாத், நடிகர் அம்பரீஷ், வினய்குமார் சொராகே, பாபுராவ், யு.டி. காதர், சதீஷ் ஜர்கிஹோலி, எம்.பி. பாட்டீல், ஆஞ்சநேயா, சிவராஜ் தங்கடகி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டார்.

இணை அமைச்சர்களாக அபய்சந்திர ஜெயின், தினேஷ் குண்டுராவ், கிருஷ்ண பைரேகவுடா, ஷரனா பிரகாஷ் பாடீல், சந்தோஷ் லட், கிம்மனே ரத்னாகர், நடிகை உமாஸ்ரீ மற்றும் பரமேஸ்வர் நாயக் ஆகியோரும் பதவியேற்றனர். அனைவருக்கும் ஆளுநர் பரத்வாஜ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றவர்களில் பெரும்பாலானோர் ஆளுநர் பரத்வாஜ், முதல்வர் சித்தராமையா ஆகியோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.

அமைச்சர்களில் 10 பேர் புதுமுகங்கள் ஆவர். ஒரே ஒரு பெண் அமைச்சராக உமாஸ்ரீ பதவியேற்றார். இவர்களுக்கான இலாகாக்கள் விரைவில் ஒதுக்கப்படும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி.கே. சிவக்குமாருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. அவர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளன. இருப்பினும் அவரை அடுத்த சுற்றில் அமைச்சராக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: