முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயனாவர சூதாட்ட தரகர்களின் தலைவர் தப்பி ஓட்டம்

சனிக்கிழமை, 18 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.19 - சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சூதாட்ட தரகர்களின் தலைவர் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டதாகவும், அவரது கார் சென்னை விமான நிலையத்தில் சிக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஐ.பி.எல். கிரிக்கெட் வெற்றி-தோல்வி பற்றி சென்னையில் சூதாட்டம் நடத்தியதை போலீசார் கண்டு பிடித்தனர். அவர்கள் சென்னையில் தனி அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்தனர். 20 இடங்களில் தரகர்கள் செயல்பட்டனர். இவர்கள் தங்களுக்கிடையே `நெட்வொர்க்' அமைத்துக் கொண்டு தங்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் மாநில சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 6 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் வசதி படைத்தவர்கள். வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சூதாட்டத்தை நடத்திய முக்கிய புள்ளிகள் பலர் தப்பி ஓடி விட்டனர். அவர்களில் ஒருவர் பிரசாந்த் அயனாவரம் மேடவாக்கம் டேங்க் ரோட்டில் வசிக்கிறார். இவர்தான் சென்னையில் உள்ள சூதாட்ட தரகர்கள் சங்கத்தின் தலைவராக செயல்பட்டார். அவரைத்தேடி போலீசார் நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அவர் குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் விமான நிலையம் சென்றனர். அங்கு அவரது கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். குடும்பத்தினருடன் விமானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டது தெரிய வந்தது. பிரசாந்த்துக்கு அயனாவரத்தில் மிகப்பெரிய ஆடம்பர பங்களா உள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்புதான் இந்த பங்களாவை அவர் ரூ.3 1ற2 கோடிக்கு வாங்கினார்.

இந்த பங்களாவில் 8 தனித் தனி வீடுகள் உள்ளன. இங்கு 7 மாதங்களுக்கு முன்பு குடியேறினார். இங்கு அக்கம் பக்கம் வசிப்பவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள். பிரசாந்த்தை அவர்கள் பைனான்சியர் என்றே கருதி இருந்தனர். அவரது அலுவலகத்துக்கு வசதி படைத்தோர் வந்து செல்வதாகவும் தெரிவித்தனர். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரசாந்த் பேச மாட்டார். புன்சிரிப்பு மட்டும் சிரிப்பார். கார் நேராக வீட்டுக்குள் சென்றுதான் நிற்கும்.

அதேபோல் வீட்டில் இருந்தே கார் புறப்பட்டுச் செல்லும் அந்த அளவுக்கு அவரது பயணம் ரகசியமாக இருக்கும். வீட்டுக் காவலாளியிடம் போலீசார் விசாரித்த போது, பிரசாந்த்தின் மனைவி 10 நாட்களுக்கு முன் வட நாட்டுக்கு சுற்றுலா சென்று விட்டதாகவும், பிரசாந்த்தும் அவரது 2 மகன்களும் 2 நாட்களுக்கு முன் வெளியூர் சென்றதாகவும் தெரிவித்தார். இந்த சூதாட்டத்தில் பிரசாந்த் முக்கிய பங்கு வகித்தார் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.

தலைமறைவாக இருக்கும் 8 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பிரசாந்த் வீட்டில் கோர்ட்டு அனுமதியுடன் போலீசார் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவருக்கு டெல்லியைச் சேர்ந்த சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பிடிப்பட்ட 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்