முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுடெல்லி வந்த சீன பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 20 - சீன பிரதமர் லீ கெகியாங் 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். புதுடெல்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.  

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை தீராத பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லைப் பகுதியில் சீன ராணுவம் நுழைந்து தவுலத் பெக் ஒல்தி பகுதியில் கூடாரங்களை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்து பேசி இந்த பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டது. இங்கு பிரச்சனை நடந்து கொண்டிருந்த போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். 

இந்த நிலையில் 3 நாள் பயணமாக சீன பிரதமர் லீ கெகியாங் நேற்று புதுடெல்லி  வந்தார். டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில்  வந்திறங்கிய அவரை மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் அகமது மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர். வரவேற்புக்கு பின்னர்  பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து எல்லை பிரச்சனை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சீன பிரதமர் லீக்கு மன்மோகன் சிங் மாலையில் விருந்தளித்து உபசரித்தார். லீக்கு ராஷ்ட்ரபதி பவனில் இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து அவர் ராஜ்காட் சென்று காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு அவர் மீண்டும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருக்கிறது. அதன் பிறகு லீக்கு பிரதமர் மதிய விருந்து அளிக்கிறார். லீயை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் சந்தித்து பேசுகின்றனர். லீ துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்திக்கிறார். 

அதை தொடர்ந்து செவ்வாய்கிழமை தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். அதன் பிறகு மும்பை செல்லும் அவர் டி.சி.எஸ். அலுவலகத்திற்கு செல்கிறார். சீனா - ஜப்பான் இடையேயான இரண்டாவது போரின் போது இந்தியாவால் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட துவாரகாநாத் கொட்னிஸ் உறவினர்களை அவர் சந்தித்து பேசுகிறார். பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா கட்டும் 3 அணைகளால் இந்தியாவுக்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறையும் என்று இந்தியா அஞ்சுகிறது. ஆனால் தண்ணீரின் அளவு குறையாது என்கிறது சீனா. இந்நிலையில் இந்தியா வரும் லீயிடம் நதி நீர் ஆணையம் அமைக்க அல்லது நதி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்