முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெட்லியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க கோரிக்கை

புதன்கிழமை, 22 மே 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மே.23  - அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகள் ஹெட்லி,ராணா ஆகியோரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா கோரியுள்ளது. 

இந்தியாவில் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் டேவிட் ஹெட்லி, அவருடைய நண்பர் தஹவூர் ராணா ஆகியோர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு அமெரிக்காவின் சிகாகோ கோர்ட்டு தண்டனை விதித்துள்ளது. தற்போது ஹெட்லியும் ராணாவும் சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த அமெரிக்க அரசிடம் மத்திய அரசு கோரியுள்ளது. ஆனால் இது குறித்து இரண்டு நாடுகளின் அரசுகளிடமிருந்து அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியாகவில்லை. இது குறித்து ஏற்கனவே அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டரிடம் இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பேசியுள்ளார். இரண்டு நாடுகளின் சட்டதிட்ட விதிகளின்படி அந்த இரண்டு பேரிடமும் விசாரணை நடத்த முடியுமா என்பது குறித்து இந்திய உள்துறை அமைச்சகமும் அமெரிக்க நீதித்துறையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதில் ஷிண்டேவும் ஹோல்டரும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். அமெரிக்க அனுமதி பெற்று ஏற்கனவே ஹெட்லியிடம் இந்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்திவிட்டன. ஆனால் ராணேயிடம் விசாரணை நடத்த அமெரிக்கா இன்னும் அனுமதி அளிக்கவில்லை. மேலும் ஹெட்லியின் அமெரிக்க மனைவி ஷாஜியா, அவருடைய பெண் நண்பர் போர்ஷியா பீட்டர் மற்றொரு பெண் நண்பர் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் அமெரிக்கா இன்னும் அனுமதிக்கவில்லை. 

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஹெட்லிக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சிகாகோ கோர்ட்டு விதித்தது. ஆனால் அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த இந்தியாவுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. டென்மார்க் பத்திரிகை அலுவலகத்தை தாக்க சதித்திட்டம் தீட்டியதாக ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லி மற்றும் பலரிடம் மேலும் விசாரணை நடத்தினால் புதிய தகவல்கள் கிடைக்கலாம் என்று இந்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நம்புகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்