முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவேரி மேற்பார்வைக் குழுவின் கூட்டம் ஜூன் 1-ல் கூடுகிறது

வெள்ளிக்கிழமை, 24 மே 2013      அரசியல்
Image Unavailable

சென்னை,மே.25 - முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சியின் வெற்றியாக காவிரி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் வரும் ஜூன் 1-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினையை தீர்ப்பதற்காக வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பாக தமிழகத்திற்கு வருடந்தோறும் 209 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை. இதனையடுத்து கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நடுவர்மன்றம் தனது இறுதித்தீர்ப்பை வழங்கியது. இந்த இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிடும்படி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதினார். ஆனால் இதை மன்மோகன் சிங் கண்டு கொள்ளவே இல்லை. அதனால் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்க சுப்ரீம்கோர்ட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, காவரி நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிடும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பு மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது. ஆனால் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி நடுவர் மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்கும்படி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதினார். ஆனால் இது தொடர்பாக மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையொட்டி சுப்ரீம்கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையொட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு இடைக்கால ஏற்பாடாக காவிரி மேலாண்மை குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த குழுவில் மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் தலைவராக இருப்பார் மற்றும் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த குழுவின் முதல் கூட்டம் வரும் ஜூன் 1-ம் தேதி புதுடெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் காலை 10-30 மணிக்கு நடைபெறும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க முதல்வர் ஜெயலலிதா இடைவிடாத மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றியாக இந்த மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 1-ம் தேதி நடக்கும் குழுக்கூட்டத்தில் காவிரி நதிநீரில் தமிழகத்திற்கு  உள்ள உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு சார்பாக வலியுறுத்தப்படும் என்றும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்