முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக ஊழல்: மொய்லி மறுப்பு

சனிக்கிழமை, 25 மே 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மே. 26 - முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதிக லாபமடைய வசதியாக ஆந்திர பிரதேசத்தில் உள்ள கே.ஜி.டி. 6 இயற்கை எரிவாயு வயலில் உற்பத்தியாகும் எரிவாயுவை அதிக விலைக்கு வாங்க பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

இதையடுத்து இந்த விவகாரத்தில் உண்மையை விளக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

இயற்கை எரிவாயு விலையை உயர்த்தும் விவகாரத்தில் மத்திய அமைச்சரவை தயாரித்த குறிப்புகள் மற்றும் மத்திய திட்டக் குழு பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் ரங்கராஜன் தலைமையிலான குழு ஆகியவை அளித்த பரிந்துரைகளை மீறி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக வீரப்பமொய்லி செயல்படுகிறார். இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறினார். மொய்லிக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அலுவல் குறிப்புகள் பெட்ரோலியத் துறை கொள்கை நிர்ணய குறிப்புகள் அடங்கியதாக கூறப்படும் சில ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார். 

குருதாஸ்தாஸ் குப்தாவின் இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் வீரப்ப மொய்லி மறுப்பு தெரிவித்துள்ளார். எரிவாயு விலையை மாற்றியமைக்க மத்திய அரசு உத்தேசித்துள்ள யோசனை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மட்டும் பொருந்தாது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் வீரப்ப மொய்லி விளக்கமளித்தார். இந்த விவகாரத்தில் தன் மீது குருதாஸ்தாஸ் குப்தா சுமத்தும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய மொய்லி, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக நான் செயல்படுவதாக குருதாஸ்தாஸ் குப்தா சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. எரிவாயு விலையேற்றம் தொடர்பாக பிரதமரால் நியமிக்கப்பட்ட பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் ரங்கராஜன் கடந்த ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். அதை பரிசீலித்து பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவையிடம் அனுமதி பெறும் கோப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. 

அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படும் புதிய விலை 2014 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி முதல்தான் அமலுக்கு வரும். எரிவாயு உற்பத்தியில் ஈடுபடும் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் புதிய விலை நிர்ணயம் பொருந்தும். புதிய விலை உயர்வால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக பலன் கிடைக்கும். நம் நாட்டில் 60 சதவீத எரிவாயு உற்பத்தியை ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள்தான் செய்து வருகின்றன. அதனால் குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக பெட்ரோலிய துறை முடிவு எடுப்பதாக குருதாஸ்தாஸ் குப்தா கூறும் புகாரை முழுமையாக நிராகரிக்கிறேன் என்றார் மொய்லி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்