முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் - தாய்லாந்து நாடுகளுக்கு பிரதமர் நாளை பயணம்

சனிக்கிழமை, 25 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 26 -- ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் நாளை திங்கட் கிழமை அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். 

ஜப்பானில் மூன்று நாட்களும், தாய்லாந்தில் ஒரு நாளும் தங்கியிருந்து அந்த நாட்டு தலைவர்களுடன் இரு தரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியுறவு துறை செயலர் ரஞ்சன் மத்தாய் கூறியதாவது, 

டெல்லியில் இருந்து நாளை காலையில் பிரதமர் புறப்படுகிறார். ஜப்பானில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஷின்சோ அபே தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. அதையொட்டி அவரது அழைப்பின் பேரில் ஜப்பான் பயணத்தை நமது பிரதமர் மேற்கொள்கிறார். 

ஜப்பான், இந்தியா நட்புறவை கொண்டாடும் வகையில் இந்திய ஜப்பானிய அமைப்புகளை சேர்ந்தவர்களும், அந்த நாட்டு நாடாளுமன்ற குழுவினரும் ஏற்பாடு செய்துள்ள கூட்டு கூட்டம் 28 ம் தேதி நடைபெறுகிறது. அதில் பிரதமர் பங்கேற்கிறார். அவருக்கு ஜப்பானிய பிரதமர் இரவு விருந்தளிக்கிறார். அதை தொடர்ந்து புதன் கிழமை காலையில் ஜப்பான் மன்னரை பிரதமர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார். அதன் பிறகு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மன்மோகன்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

இந்த சந்திப்புகளின் தொடர்ச்சியாக மன்மோகன்சிங்கும், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவும் தலைநகர் டோக்கியோவில் பேச்சுவார்த்தை நடத்துவர். இரு தரப்பு பொருளாதாரம், தொழில் வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம், அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பர். 

அதன் முடிவில் பல்வேறு துறைகள் தொடர்பான ஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி மும்பை சென்னை பெங்களூர் இடையிலான தொழிலக விரைவு சாலை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்டமைப்பு திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்துவர். 30 ம் தேதி காலையில் ஜப்பான் பயணத்தை நிறைவு செய்து கொண்டு பிரதமர் தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்கிறார் என்று ரஞ்சன் மத்தாய் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்