முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுக்கு எதிராக வினோத் ராய் வீசிய 3 அஸ்திரங்கள்!

சனிக்கிழமை, 25 மே 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மே. 26 - மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக முன்வைக்கப்படுகிற 3 மிகப் பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளான காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் ஆகிய இந்த 3 அணுகுண்டுகளையும் தமது பதவிக்காலத்தில் வீசி பெரும் புயலை கிளப்பியவர் ஓய்வுபெற்ற மத்திய கணக்கு தணிக்கை துறை தலைவர் வினோத் ராய்.

நாட்டின் தன்னாட்சி பெற்ற உயரிய அமைப்புகளில் ஒன்று மத்திய கணக்கு தணிக்கைத் துறை. இதன் தலைமை அதிகாரியாக 2008 ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி முதல் மே 22 ம் தேதி வரை பொறுப்பு வகித்தவர் வினோத் ராய். அவரது ஆட்சிக்காலத்தில் 3 முக்கிய அணுகுண்டுகள், மத்திய அரசுக்கு எதிராக கணக்கு தணிக்கை துறையால் வீசப்பட்டன.

2011 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் காமன்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த மத்திய கணக்குத் தணிக்கை துறையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒலிம்பிக் சங்கத் தலைவராக கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் சுரேஷ் கல்மாடியின் ஊழல்கள் அம்பலமானது. டெல்லி மாநில அரசும் கணக்குத் தணிக்கை துறையின் விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை. இந்த விவகாரத்தில் சுரேஷ் கல்மாடி சிறைக்குப் போக நேரிட்டது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் கடைபிடித்த நடைமுறைகளை 2010 ம் ஆண்டு தமது 2 வது அறிக்கையில் விமர்சித்திருந்தது. 2001 ம் ஆண்டு விலைக்கே 2008 ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கப்பட்டது என்பது அதன் முக்கிய குற்றச்சாட்டு. இதன் மூலம் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று பெரிய அணுகுண்டை வீச பெரும் பிரளயத்தையே கிளப்பியது கணக்கு தணிக்கைத் துறை.

இந்த விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டு கைதும் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் உச்சக்கட்டமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9 நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை உச்சநீதிமன்றமே ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2004 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரையிலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு உரிமங்கள் முறைகேடாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கை குற்றம்சாட்டியது. இதனால் 34 பில்லியன் டாலர் நாட்டுக்கு இழப்பு என்ற மற்றொரு அணுகுண்டையும் வீசியது கணக்குத் தணிக்கை துறை. அதுவும் பிரதமர் மன்மோகன்சிங் வசம், நிலக்கரித் துறை அமைச்சகம் இருந்த போது இந்த ஒதுக்கீடு நடந்தது என்று கணக்குத் தணிக்கை துறை அறிக்கை கூறியது. 

பிரதமருக்கு எதிரான இந்த வழக்கில் சி.பி.ஐ. ன் விசாரணை அறிக்கையை திருத்தி தமது சட்ட அமைச்சர் பதவியை அஸ்வினிகுமார் இழக்க நேரிட்டது. அத்துடன் மத்திய அரசை இந்த விவகாரத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. சி.பி.ஐ. சுதந்திரமாக செயல்படுவதற்கு வழிசெய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. அரசியல்வாதிகளை விழிபிதுங்க வைத்த வினோத் ராய், தற்போது ஐ.நா. சபையில் வெளிவிவகார கணக்கு தணிக்கைக் குழுவின் தலைவராக, சர்வதேச தலைமை கணக்கு நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்