முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை ஓட்டல் அதிபர் தொடர்பு

திங்கட்கிழமை, 27 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே 28 - ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடை பெற்ற ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகிய 3 வீரர்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதோடு முன்னாள் வீரர்கள் 4 பேர், சூதாட்ட தரகர்கள் 12 பேர் ஆகியோர் ஸ்பாட்பிக்சிங் வழக்கில் பிடிபட்டுள்ளனர். 

இதை தொடர்ந்து சென்னை, மும்பை, பெங்களூர் உள்பட பல்வேறு நகரங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி சூதாட்ட தரகர்களை வேட்டையாடி வருகிறார்கள். சென்னையில் 6 சூதாட்ட புக்கிகள் கைதாகி உள்ளனர். மேலும் 6 தரகர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் ஜெய்ப்பூர், வாரணாசி உள்பட பல நகரங்களில் சூதாட்ட புரோக்கள் சிக்கியுள்ளனர். 

ஸ்பாட்பிக்சிங் சூதாட்ட வழக்கில் இந்தி நடிகர் விண்டூ தாராசிங் கைதானார். சூதாட்ட தரகர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்து அவர் பெட்டிங்கில் ஈடுபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் கைதானார். 

இருவரும் 150-க்கும் மேற்பட்ட முறை செல்போனில் உரையாடி இருந்ததை மும்பை போலீசார் கண்டு பிடித்தனர். விண்டூ மூலம் மெய்யப்பன் ஐ.பி.எல். பெட்டிங்கில் பணம் கட்டி இருந்தார். 

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அவரது வீட்டில் மும்பை போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் இந்த சூதாட்டத்தில் சென்னையை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. விண்டூ, மெய்யப்பனிடம் போலீசார் ஒரே நேரத்தில் நடத்திய விசாரணையில் அந்த ஓட்டல் அதிபரின் பெயரை தெரிவித்து உள்ளனர். 

இதைத் தொடர்ந்து எழும்பூரில் உள்ள அந்த ஓட்டல் அதிபரின் நட்சத்திர ஓட்டலில் மும்பை போலீசார் சோதனை நடத்தினார்கள். இதேபோல அவருக்கு சொந்தமான தியாகராயநகரில் உள்ள மற்றொரு ஓட்டலிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது

இந்தி நடிகர் விண்டூ கைதான உடனே இந்த ஓட்டல் அதிபரும் தலைமறை வாகிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஓட்டல் அதிபர் ஐ.பி.எல். போட்டிகளின் போது ஒரு ஆட்டத்துக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி பெட்டிங் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

சென்னையில் பிடிபட்ட சூதாட்ட தரகர் கிட்டி என்ற உத்தம்ஜெயினிடம் ஓட்டல் அதிபரின் மனைவி 100 முறைக்கு மேல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சென்னையில் கைதான சூதாட்ட தரகர் பிரசாந்தின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்